"மதுரைக்காரர்கள் என்றால் உங்களுக்கு இளக்காரமாக இருக்கிறதா?" – முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி

“ஒன்றிய அரசு மெட்ரோ ரயில் இல்லை என்று சொல்வது மட்டுமின்றி, பா.ஜ.க தலைவர்களோ மதுரைக்கு மெட்ரோவே தேவையில்லை என்று திமிராகப் பேசுகிறார்கள்” என்று குற்றம்சாட்டி பேசியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

மதுரை விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
மதுரை விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

மதுரையில் நடந்த நலத்திட்ட விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் மதுரையில் ஒரு அறிவுக்கோயிலாக கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டது. அதை விரைவாகப் பெரிதாகக் கட்டி முடித்து, இப்போது பல லட்சம் நபர்கள் பயனடைந்து வருகிறார்கள். ஆனால், பத்து வருடத்திற்கு முன்பு ஒன்றிய அரசு, மதுரைக்கு அறிவித்த எய்மஸ் மருத்துவமனை என்ன ஆனது?

நம் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உலகத் தரத்தில், 62 கோடி ரூபாயில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் அமைத்திருக்கிறோம். ஆனால், இதே பாஜக அரசு, கீழடி அகழ்வாராய்ச்சியை நிறுத்தப் பார்த்தார்கள். பல கட்டங்களாக கீழடி ஆராய்ச்சியை முன்னெடுத்து வருவது மட்டுமின்றி இதுவரை கிடைத்த தொல் பொருட்களைக் கொண்டு பிரமாண்ட அருங்காட்சியகம் அமைத்திருக்கிறோம். அதைக் காண உலகம் முழுவதுமிருந்து தமிழர்கள் வருகிறார்கள். ஆனால், பா.ஜ.க அரசு, கீழடி ஆய்வறிகையை வெளியிடாமல் தமிழ்மீது வெறுப்புடன் நடந்து கொள்கிறார்கள்.

மதுரையில் உலகத் தரத்தில் ஹாக்கி மைதானத்தைத் திறந்து வைத்து 24 நாடுகள் கலந்து கொள்கின்ற ஜுனியர் ஹாக்கி உலக கோப்பை மதுரையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசோ, குஜராத் போன்று அவர்கள் ஆட்சி செய்கின்ற மாநிலங்களுக்கு மட்டும் விளையாட்டு நிதியை கொட்டிக் கொடுக்கிறார்கள்.

நலத்திட்ட உதவி

விளையாட்டில் மட்டுமல்ல, மதுரையை முக்கிய தொழில் மையமாக உயர்த்துவதற்கு முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி வேலைவாய்ப்பை நாம் கொண்டு வருகிறோம். ஆனால், ஒன்றிய அரசை சேர்ந்தவர்கள் நம்முடைய இளைஞர்களை பகோடா விற்கச் சொல்கிறார்கள். இதுதான் உங்கள் தரம், நம் இளைஞர்களுக்கு மதுரையில் பெரிய வேலைவாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக மாட்டுத்தாவணியில் டைடல் பார்க் அமைக்கிறோம். ஆனால், ஒன்றிய அரசோ, மதுரைக்கு மெட்ரோ ரயில் இல்லை என்று சொல்கிறது. பா.ஜக தலைவர்களோ மதுரைக்கு மெட்ரோவே தேவையில்லை என்று திமிராகப் பேசுகிறார்கள். சரி இவர்கள் சொல்கின்ற லாஜிக்படி பார்த்தால், பா.ஜ.க ஆளுகின்ற வட மாநிலங்களில் இருக்கின்ற பாட்னா, ஆக்ரா, இந்தூர் ஆகியவற்றில் எல்லாம் மெட்ரோ ரயிலுக்கு எப்படி ஒப்புதல் கிடைத்தது? மதுரைக்காரர்கள் என்றால், உங்களுக்கு இளக்காரமாக இருக்கிறதா?

எங்கள் ஆட்சியில், மதுரைக்கு என்னவெல்லாம் செய்திருக்கிறோம் என்று சொல்ல வேண்டுமா? இன்று திறக்கப்பட்டிருக்கின்ற வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம், கோரிப்பாளையம் சந்திப்பில் மேம்பாலம் கட்டும் பணி உட்பட இதுவரைக்கும் 4 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான பத்தாயிரம் வளர்ச்சிப் பணிகள் செய்திருக்கிறோம், இப்போது, ஐந்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 358 வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.” என்று பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.