எதிர்காலத்தை கட்டமைத்த மோடி-புதின் சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இந்தியா மீது 25 சதவீத பரஸ்பர வரியை விதித்தார். பின்னர் இந்தியா ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் கிடைக்கும் அந்த நிதியை வைத்து தான் ரஷியா, உக்ரைன் நாட்டுடன் போரிடுகிறது என்றார். அதற்காக இந்தியாவிற்கு கூடுதலாக அபராத வரி 25 சதவீதம் என மொத்தம் 50 சதவீதம் வரி விதித்தார். ஆனால் இந்தியா அதற்கு அசைந்து கொடுக்கவில்லை. எனவே டிரம்ப், கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் ரஷிய நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து, அவர்கள் அமெரிக்க டாலரில் பணப் பரிமாற்றம் செய்யக்கூடாது என்று தடை போட்டார். ஆனால் இந்தியா கடந்த நவம்பர் மாதம் கூட, தனது தேவையில் 36 சதவீத கச்சா எண்ணெயை ரஷியாவிடம் இருந்து தான் வாங்கி இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் இந்தியா-ரஷியா உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக கடந்த வாரம் இந்தியாவுக்கு வந்தார். 80 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையே அனைத்து துறைகளிலும் ஆழமான நட்புறவு இருக்கிறது. இந்திய ராணுவம் பயன்படுத்தும் பெரும்பான்மையான தளவாடங்கள், விவசாயத்துக்கு தேவையான யூரியா, பொட்டாஷ் போன்ற ரசாயன உரங்கள் பெருமளவில் ரஷியாவில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. புதின் இந்தியாவுக்கு வருவது இது 10-வது முறை என்றாலும், இந்த தடவை அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு மிகவும் சிறப்பாக இருந்தது.

இந்தியாவும், ரஷியாவும் எதிர்காலத்துக்காக பல கட்டமைப்புகளை உருவாக்கும் 16 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. குறிப்பாக 5 ஆண்டு பொருளாதார திட்டம் உருவாக்கப்பட்டது. வர்த்தக பற்றாக்குறையை குறைக்க ரஷியா இனி கூடுதலாக இந்தியாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய ஒப்புக்கொண்டது. இந்தியாவில் இருந்து லட்சக்கணக்கான திறன் சார்ந்த மற்றும் ஓரளவு திறன் சார்ந்த இளைஞர்கள் ரஷியாவில் வேலைவாய்ப்பு பெறுவதற்காக ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தாண்டு 80 ஆயிரம் ரஷியர்கள், இந்தியாவிற்கு சுற்றுலா வந்துள்ளனர். இந்த எண்ணிக்கையை அதிகரிக்க ரஷியர்களுக்கு 30 நாட்கள் இலவச இ-விசா திட்டத்தை இந்திய அரசு அறிவித்து இருக்கிறது.

இந்தியாவுக்கு தங்குதடையின்றி எரிபொருள் சப்ளை செய்வதற்கும் ரஷியா ஒப்புதல் அளித்துள்ளது. இது கூடங்குளத்தில் உள்ள அணு மின்நிலையத்துக்கு ரஷியா அணுசக்தி எரிபொருளை தங்கு தடையில்லாமல் வழங்க வழிவகுக்கும். இரு நாடுகளும் தங்களுக்கு இடையேயான வர்த்தகத்தை தங்கள் நாட்டு கரன்சியிலேயே, அதாவது இந்திய ரூபாயிலும்- ரஷிய நாட்டின் ரூபிள் கரன்சியிலுமே நடத்திக் கொள்ளலாம் என்ற முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.

இந்திய – ரஷிய நிறுவனங்கள் கூட்டாக இணைந்து ரஷியாவில் ஆண்டுக்கு 20 லட்சம் டன் யூரியா உற்பத்தி செய்யும் பிரமாண்டமான தொழிற்சாலையை அமைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. தற்போது இந்தியாவுக்கும், ரஷியாவுக்கும் இடையே இந்திய மதிப்பில் ரூ.6.1 லட்சம் கோடி மதிப்புள்ள பரஸ்பர வர்த்தகத்தை 2030-க்குள் ரூ.9 லட்சம் கோடி அளவுக்கு உயர்த்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் என்ற முடிவும் எடுக்கப்பட்டது. அனைத்து துறைகளிலும் இரு நாட்டு ஒத்துழைப்பையும், கூட்டுறவையும் வளர வைக்கும் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது, பொருளாதார, வர்த்தக, நட்புறவுக்கான வாசலை விசாலமாக திறந்து வைத்திருக்கிறது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.