நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட வாய்ப்புள்ள தொகுதிகளின் பட்டியலில், காரைக்குடி தொகுதி முதன்மையானது என்கிறார்கள் அக்கட்சியினர். ஆனால் காரைக்குடி நா.த.க-வை பனிப்போர் சூழ்ந்திருப்பதால் தேர்தல் பணிகள் சுணக்கமடைவதாகச் சொல்கிறார்கள் சிவகங்கை நா.த.க நிர்வாகிகள்!
2026 சட்டமன்றத் தேர்தலில் எம்.எல்.ஏ கணக்கை தொடங்கிவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார் சீமான். அதேசமயம் ‘சீமானை எம்.எல்.ஏ-வாக்கி விட வேண்டும்’ என்பதில் மிகத் தீவிரமாக இருக்கிறார்கள் கட்சியின் முன்னணி நிர்வாகிகள். “சீமானின் சொந்த மாவட்டத்தில் முகம் தெரியாத வேட்பாளர்கள் நிற்கும்போதே 17% வாக்குகள் கிடைத்துவரும் நிலையில், இந்த முறை காரைக்குடி தொகுதியில் சீமானைப் போட்டியிடவைக்கலாம் என்ற பேச்சு கட்சிக்குள் நிலவுகிறது. அதேசமயம் காரைக்குடி தொகுதிக்குள் தீர்க்க வேண்டிய பிரச்னைகள் ஏராளமாக இருக்கின்றன” என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.

காரைக்குடி தொகுதி நிலவரம் குறித்து நம்மிடம் பேசிய நா.த.க புள்ளிகள் சிலர், “நாம் தமிழர் இயக்கமாக இருந்தபோதே காரைக்குடியில் நா.த.க-வின் முகமாக இருந்தவர் மாறன். நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த மறைந்த சுபா.முத்துகுமாரின் ஆதரவாளரான இவர், தேர்தல் அரசியலிலும் நா.த.க-வுக்குப் பக்கபலமாக இருந்துவருகிறார்.
2016–19 காலகட்டத்தில் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் முன்னாள் மாநில நிர்வாகி வெற்றிக்குமரன். இருவருமே சீமானுக்கு நெருக்கம் என்றாலும் வெற்றிக்குமரன் கை ஓங்கியிருந்தது. ஒருகட்டத்தில் மாறனுக்கும் வெற்றிக்குமரனுக்கும் இடையே நடந்த ஈகோ யுத்தத்தில் மாறனுக்கு கட்சிக்குள் எந்த முக்கியத்துவமும் தரப்படாமல் கார்னர் செய்யப்பட்டார்.

மாறனுக்கு பதில், மாறனின் ஆதரவாளராக இருந்த சாயல்ராமுக்கு காரைக்குடி நா.த.க-வை கவனிக்கும் பொறுப்பை பெற்றுக் கொடுத்தார் வெற்றிக்குமரன். ஜூனியர் சாயல்ராமுக்கு கீழ் சீனியர் மாறனைப் பணியாற்ற வைத்ததால் கட்சி நடவடிக்கைகளில் சுணக்கம் ஏற்பட்டது. தற்போது வெற்றிக்குமரனை கடந்த 2021-ல் சீமான் கட்சியிலிருந்து நீக்கிய பிறகு, பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு மாறனும், சாயல்ராமும் தற்போது மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருக்கிறார்கள். இருவருமே காரைக்குடி தொகுதியில் தனித்த செல்வாக்குடன் இருப்பதால் பனிப்போர் இன்னமும் நீடிக்கிறது” என்றனர்.

தொடர்ந்து பேசியவர்கள், “வழக்கமாக நவம்பர் மாதம் நடக்கும் மாவீரர் நாள் பொதுக்கூட்டங்களை மாவட்ட நிர்வாகிகள் இணைந்துதான் நடத்துவார்கள். ஆனால் இந்த ஆண்டு நடத்தப்பட்ட மாவீரர் நாள் நிகழ்வு காரைக்குடியில் நடந்தாலும் சென்னையிலுள்ள முன்னணி நிர்வாகிகளே முன்னின்று நடத்தினார்கள். சாயல்ராமும், மாறனும் எதிரும் புதிருமாக இருந்ததே இதற்கு பின்னணி எனவும் சொல்லப்படுகிறது” என்றனர்.
“சீமான் போட்டியிட திட்டமிடும் தொகுதியில் மாநில நிர்வாகிகள் இருவர் மோதிக்கொள்வது கட்சிக்கு நல்லதல்ல” என வருந்துகிறார்கள் தலைமைக்கு நெருக்கமானவர்கள்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய அவர்கள், “காரைக்குடியில் நிலவும் இந்த பனிப்போரை தீர்க்காமல் எவ்வளவு பெரிய வியூகத்தை வகுத்தாலும் அது பலனளிக்கப் போவதில்லை. ஆனால் அண்ணன் சீமான் ‘இணைந்து பணியாற்றச் சொல்லுங்கள்’ என உத்தரவோடு நிறுத்திக் கொள்கிறார். இருவரையும் அழைத்துப் பேசி பிரச்னையை தீர்க்க வேண்டும் அல்லது தொகுதியை இரண்டாகப் பிரித்து இருவருக்கும் தனித்தனி பொறுப்புகளை வழங்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் தேர்தல் பணிகள் வேகமெடுக்கும்” என்றனர்.