Goa: திடீரென பற்றிய தீ; 25 பேர் பலியான சோகம், பதற வைக்கும் வீடியோ காட்சிகள் – என்ன நடந்தது?

கோவாவின் ஆர்போராவில் உள்ள ‘பிர்ச் பை ரோமியோ லேனில்’ நேற்றிரவு பாலிவுட் பேங்கர் நைட் பார்ட்டி நடந்தது. அதிக சத்தமுள்ள இசைக்கு நூற்றுக்கணக்கானவர்கள் நடனமாடிக் கொண்டாடினர். அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக வெளியான வீடியோவில், நடனக் கலைஞரின் பின்னால் உள்ள கன்சோலில் தீ எரிவது பதிவாகியிருந்தது. கிளப்பின் ஊழியர்கள் சிலர் கன்சோலை நோக்கி விரைந்து சென்று தீ பரவும் இடத்திலிருந்து கம்ப்யூட்டர்களை எடுக்கிறார்கள். ஆரம்பத்தில் யாரும் இதைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

திடீரென தீ மளமளவெனப் பரவியது. அப்போதுதான் அங்கிருந்தவர்களுக்கு விபத்தின் தீவிரத் தன்மை புரிந்திருக்கிறது. ஒரே நேரத்தில் எல்லோரும் தப்பிக்க ஓடியதில் பதற்றமான சூழல் ஏற்பட்டிருக்கிறது.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டதில், “தீ விபத்து ஏற்பட்ட பிறகு, குறுகிய வாசல்தான் இருந்ததால் பதற்றம் அதிகரித்தது. பலர் தப்பியோடிய நிலையில், சில சுற்றுலாப் பயணிகள் கீழே உள்ள சமையலறைக்கு ஓடி, அங்கு ஊழியர்களுடன் சிக்கிக் கொண்டனர். குறுகிய வாசல் மீட்பு பணியை மேலும் சவாலாக மாற்றியது.” என்றார்.

இது தொடர்பாக தீயணைப்பு வீரர் ஒருவர் அளித்த பேட்டியில், “பார்ட்டி நடந்த இடத்துக்குச் செல்லும் பாதைகள் தீயணைப்பு வாகனங்கள் செல்லும் அளவுக்கு அகலமாக இல்லை. இதனால் 400 மீட்டர் தொலைவில் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டது. பலர் மூச்சுத் திணறலால் இறந்தனர். சிலர் கடுமையான தீக்காயங்களுக்கு ஆளாகினர்.” என்றார்.

இந்த விபத்து குறித்து பேசிய கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், “இது ஒரு துரதிர்ஷ்டவசமான நாள். கோவாவின் சுற்றுலா வரலாற்றில் முதல்முறையாக இவ்வளவு பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 25 பேர் பலியாகினர். அதிகாலை 1.30-2 மணிக்கு விபத்து நடந்த இடத்தை அடைந்தேன். எனது முதற்கட்ட விசாரணையில், மேல் தளத்தில் தீப்பிடித்ததாகத் தெரிகிறது.

தீ விபத்து ஏற்பட்ட கிளப்
தீ விபத்து ஏற்பட்ட கிளப்

கதவுகள் மிகவும் நெரிசலாக இருந்ததால், ஒரே நேரத்தில் எல்லோராலும் தப்பிக்க முடியவில்லை. நிலத்தடி பகுதிக்கு சென்ற பலர் சரியான காற்றோட்டம் இல்லாததால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்தனர். ஹோட்டலின் பொது மேலாளர்கள் மற்றும் உரிமையாளர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தீ பாதுகாப்பு மற்றும் கட்டுமான விதிமுறைகள் இந்த விடுதியில் பின்பற்றப்பட்டதா என்பது குறித்து விசாரணையில் முழுமையாக ஆய்வு செய்யப்படும். எங்கள் மொத்தக் குழுவும் இதற்காகத் தொடர்ந்து உழைத்துக்கொண்டிருக்கிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் – அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும். உயிரிழந்த குடும்பங்களுக்கு அரசு நிதியுதவி வழங்கும். மேலும் இதுபோன்ற சம்பவம் இனி நடக்காமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுப்போம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

முதற்கட்ட தகவலில் இதுவரை 25 பேர் உயிரிழந்ததாகவும், 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. பிரபல சுற்றுலா தளத்தில் நடந்த இந்த சோகம், சுற்றுலா பயணிகளிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.