2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு மிகப் பெரிய தலைவலி உருவாகியுள்ளது. டி20 உலக கோப்பைக்கான ஒளிபரப்பு உரிமத்தை வைத்திருக்கும் இந்தியாவின் முன்னணி நிறுவனமான ஜியோஸ்டார், ஒப்பந்தத்திலிருந்து பாதியிலேயே வெளியேற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ஐசிசி மற்றும் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Add Zee News as a Preferred Source

ரூ. 25,000 கோடி நஷ்டம்!
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கட்டுப்பாட்டில் இயங்கும் ஜியோஸ்டார் நிறுவனம், ஐசிசி உடன் 2024 முதல் 2027 வரையிலான நான்கு ஆண்டுகளுக்கு சுமார் 3 பில்லியன் டாலர் (தோராயமாக ரூ. 25,000 கோடி) மதிப்பிலான ஒப்பந்தத்தை செய்திருந்தது. ஆனால், கடந்த ஓராண்டில் விளையாட்டு போட்டிகளை ஒளிபரப்பியதில் ஏற்பட்ட கடுமையான நிதி இழப்பு காரணமாக, இந்த ஒப்பந்தத்தை தொடர முடியாது என்று ஐசிசியிடம் திட்டவட்டமாக கூறிவிட்டது. ஜியோஸ்டார் நிறுவனத்தின் தணிக்கை செய்யப்பட்ட கணக்கு விவரங்களின்படி, விளையாட்டு போட்டிகளுக்கான ஒப்பந்தங்களில் ஏற்பட்ட நஷ்டம், ஒரே ஆண்டில் ரூ. 12,319 கோடியிலிருந்து ரூ. 25,760 கோடியாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தாங்க முடியாத நஷ்டமே ஒப்பந்த முறிவுக்கு முக்கியக் காரணமாக சொல்லப்படுகிறது.
அடுத்த ஒளிபரப்பாளர் யார்?
ஜியோஸ்டாரின் இந்த முடிவால் அதிர்ச்சியடைந்துள்ள ஐசிசி, 2026 முதல் 2029 வரையிலான காலக்கட்டத்திற்கான ஒளிபரப்பு உரிமத்தை மீண்டும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா (Sony), அமேசான் பிரைம் (Amazon Prime) மற்றும் நெட்ஃபிலிக்ஸ் (Netflix) ஆகிய நிறுவனங்களை ஐசிசி அணுகியதாக கூறப்படுகிறது.
இருப்பினும், ஐசிசி நிர்ணயித்துள்ள 2.4 பில்லியன் டாலர் என்ற தொகை மிக அதிகமாக இருப்பதாக கருதி, இந்த நிறுவனங்கள் எதுவும் வெளிப்படையாக ஆர்வம் காட்டவில்லை என்று தெரிகிறது. ஏற்கனவே உள்ள நஷ்டத்தை சமாளிக்கவே ஜியோஸ்டார் திணறும் போது, இவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்ய மற்ற நிறுவனங்கள் தயக்கம் காட்டுகின்றன.
டி20 உலக கோப்பை 2026
இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து நடத்தும் 2026 டி20 உலகக் கோப்பை தொடர், வரும் பிப்ரவரி 2026 முதல் தொடங்க உள்ளது. இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் பிப்ரவரி 15-ம் தேதி கொழும்பில் நடைபெறவுள்ளது. இவ்வளவு முக்கியமான தொடர் நெருங்கும் நேரத்தில், ஒளிபரப்பு உரிமத்தில் ஏற்பட்டுள்ள இந்த சிக்கல், போட்டிகளை நேரலையில் காண்பதில் தடங்கலை ஏற்படுத்துமோ என்ற அச்சம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ஒருவேளை வேறு எந்த நிறுவனமும் முன்வராவிட்டால், ஒப்பந்தப்படி 2027 வரை ஜியோஸ்டாரே நஷ்டத்தை பொருட்படுத்தாமல் ஒளிபரப்பை தொடர வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் அல்லது புதிய சமரச திட்டம் வகுக்கப்படலாம்.
About the Author
RK Spark