புதுடெல்லி,
இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரான அனில் அம்பானி வசம் இருந்த ரிலையன்ஸ் குழுமம் சரிய தொடங்கியது. அனில் அம்பானிக்கு முன்னாள் இந்தி நடிகை டீனாவுடன் திருமணமாகி ஜெய் அன்மோல் (வயது 33) மற்றும் ஜெய் அன்சுல் (29) என இரு மகன்கள் உள்ளனர். இதில் வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனமான ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவராக ஜெய் அன்மோல் இருந்தார்.
இந்த நிறுவனத்துக்காக பல்வேறு இந்திய பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளிடம் இருந்து ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவன தலைவர் ஜெய் அன்மோல் அம்பானி ரூ.5 ஆயிரத்து 572 கோடிவரை கடன் பெற்றிருந்தார். கடந்த 2019-ம் ஆண்டு ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் பெரும் நஷ்டம் அடைந்ததை தொடர்ந்து திவாலானதாக அறிவிக்கப்பட்டது.
பல்வேறு வங்கிகளிடம் இருந்து பெறப்பட்ட கடனை ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் திருப்பி வழங்கிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. யூனியன் வங்கியிடம் (முன்னதாக ஆந்திரா வங்கி) இருந்து ரூ.450 கோடிவரை கடன் பெற்றிருந்தநிலையில் ரூ.228 கோடி திரும்ப வழங்கப்படவில்லை. இதுகுறித்து யூனியன் வங்கி ரிசர்வ் வங்கி மூலமாக சி.பி.ஐ.யிடம் வழக்கு தொடுத்தது.
இதனை தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதன் ஒருபகுதியாக நேற்று அனில் அம்பானியின் மூத்த மகனான ஜெய் அன்மோல் அம்பானியின் வீட்டில் நேற்று சோதனை நடத்தினர். மராட்டியம் மாநிலம் மும்பையில் உள்ள அவருக்கு சொந்தமான வீடுகள், குடியிருப்புகள், ரிலையன்ஸ் நிறுவனத்தின் அலுவலகங்களில் இதுகுறித்து சோதனை நடத்தப்பட்டது. நீண்ட நேரம் நீடித்த இந்த சோதனையில் வழக்கு தொடா்பான முக்கிய ஆவணங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.