தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலித்தநல்லூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்த மாரியப்பன், வெள்ளதாய் தம்பதியினரின் மகள் வேல்மதிக்கும், கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ராமர் என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்த ஒரு மாதம் கழித்து ராமர் மாலத்தீவுக்கு வேலைக்குச் சென்றுவிட்டார். அதன் பின்பு இரண்டு மாதம் கழித்து லீவில் கடையநல்லூர் வந்து இரண்டு மாதம் தங்கிவிட்டு மீண்டும் மாலத்தீவுக்குச் சென்றுவிட்டார். இப்படி இருக்க வேல்மதியின் கணவர் அடிக்கடி மதுபோதையில் இருந்துள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி குடும்பப் பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், ராமர் மற்றும் அவரது மனைவி வேல்மதி ஆகியோர் கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரம் முத்தாரம்மன் கோவில் தென்வடக்குத் தெருவில் சிந்தாமணி என்பவரின் வீட்டு மாடியில் உள்ள வீட்டில் சுமார் ஆறு மாதகாலமாக வாடகைக்குத் தனிக்குடித்தனம் இருந்து வந்துள்ளனர்.

12.04.2018 அன்று இரவு ராமர் மற்றும் அவரது மனைவி வேல்மதிக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராமர், வேல்மதியை தையல் மிஷினில் உள்ள பெல்ட்டால் கழுத்தை இறுக்கிக் கொலை செய்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை தென்காசி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.மனோஜ்குமார், மனைவியின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்த ராமருக்கு ஆயுள் தண்டனையும், ₹10,000 அபராதமும் விதித்துத் தீர்ப்பு கூறினார். மேலும் அபராதத் தொகை செலுத்தத் தவறினால், கூடுதலாக ஆறு மாத சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.