14-வது ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி தொடர் (21 வயதுக்கு உட்பட்டோர்) சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. கடந்த 28-ந்தேதி தொடங்கிய இந்த போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் சாம்பியன் கோப்பைக்கான இறுதிப்போட்டியில் ‘நம்பர் ஒன்’ அணியான ஜெர்மனி, 4-ம் நிலை அணியான ஸ்பெயினை எதிர்கொள்கிறது.
7 முறை சாம்பியனான ஜெர்மனி அணி லீக் சுற்றில் தென்ஆப்பிரிக்கா, கனடா, அயர்லாந்தையும், காலிறுதியில் பெனால்டி ஷூட்டில் 3-1 என்ற கோல் கணக்கில் பிரான்சையும், அரையிறுதியில் 5-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவையும் தோற்கடித்து 10-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.
ஸ்பெயின் அணி லீக் சுற்றில் எகிப்து, பெல்ஜியம், நமீபியாவையும், காலிறுதியில் 4-3 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தையும், அரையிறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவையும் வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் கால் பதித்துள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை 10 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 6-ல் ஜெர்மனியும், ஒன்றில் ஸ்பெயினும் வெற்றி பெற்றன. 3 ஆட்டங்கள் டிராவில் முடிந்தது.
மொத்தத்தில் உலகக் கோப்பையை 8-வது முறையாக கைப்பற்றி தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட ஜெர்மனியும், முதல்முறையாக கோப்பையை கையில் ஏந்த ஸ்பெயினும் வரிந்து கட்டுவதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
முன்னதாக மாலை 5.30 மணிக்கு நடைபெறும் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் ரோகித் தலைமையிலான இந்திய அணி, அர்ஜென்டினாவை சந்திக்கிறது. 2 முறை சாம்பியனான இந்தியா உள்ளூரில் நடைபெறும் இந்த போட்டியில் வெறுங்கையுடன் வெளியேறாமல் குறைந்தபட்சம் ஒரு பதக்கத்துடன் நிறைவு செய்ய போராடும். ஆனால் சமபலம் வாய்ந்த அர்ஜென்டினாவும் கடும் சவால் அளிக்கும் என்பதால் இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.
7-வது இடத்துக்கான ஆட்டத்தில் பிரான்ஸ்-நியூசிலாந்து (பகல் 12.30 மணி), 5-வது இடத்துக்கான ஆட்டத்தில் பெல்ஜியம்-நெதர்லாந்து (பிற்பகல் 3 மணி) அணிகள் மோதுகின்றன.