நாடாளுமன்ற லோக் சபாவில் SIR குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்றைய மக்களவையில் SIR குறித்துப் பேசியிருக்கும் எம்.பி திருமாவளவன், “எதிர்கட்சிகள் எவ்வளவோ எதிர்ப்பு தெரிவித்தும் தேர்தலை ஒட்டி அவசர அவசரமாக நடத்தப்படும் SIR-யை நிறுத்தாமல் நடத்தி வருவது அதிர்ச்சியளிக்கிறது.
SIR-யை தேர்தயொட்டி அவசர அவசரமாக நடத்தாமல் தேர்தல் அல்லாத பிற காலங்களில் நடத்தவேண்டும். இந்த வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் என்பது வழக்கமாக நடைபெறுவதைப்போல இல்லாமல், மக்களின் குடியுரிமையை பரிசோதனை செய்யும் செயல்முறையாக இருக்கிறது. இது சட்டத்திற்கு எதிரானது.

குடியுரிமையை சோதனை செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு இருக்கிறதா? அதிகார வரம்பை மீறி தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. அது அரசியல் சட்டத்தை மீறுவதாக இருக்கிறது. வாக்குரிமையை மட்டுமல்லாமல் மண்ணின் மைந்தர்களின் குடியுரிமையைப் பறிக்கும் முயற்சியாக இருக்கிறது. வாக்குரிமை இந்திய மக்களின் அடிப்படை உரிமை, அதை பறிக்கக்கூடாது.
தேர்தல் ஆணையம் ஜனநாயகத்தின் முக்கியாமான தூண். ஆனால், தேர்தல் ஆணையம் இன்று சுதந்திரமாகச் செயல்படமுடியவில்லை. தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஏதுவாக செயல்பட்டு வருதை நாடே இன்று உணர்ந்திருக்கிறது.

தேர்தல் ஆணையம் மக்களின் குடியுரிமையைப் பரிசோதிக்கும் உரிமையை பெற்றிருக்கவில்லை. அதனால் குடியுரிமையைப் பரிசோதிக்கும், இந்த அரசியல் சட்டத்தை மீறிய SIR-யை உடனே நிறுத்தவேண்டும். தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட ஒருகோடி வாக்காளர்களின் உரிமை பறிபோகும் நிலை ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதை எந்த வகையிலும் ஏற்கமுடியாது.
இந்த EVM தேர்தல் முறையை கைவிட்டு, வாக்குச்சீட்டு முறையைக் கொண்டு வரவேண்டும்” என்று பேசியிருக்கிறார்.