திருவனந்தபுரம்,
கேரளாவில் பிரபல நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் இருந்து நடிகர் திலீப் உள்பட 4 பேர் விடுவிக்கப்பட்டனர். 6 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட திலீப் கருத்து தெரிவிக்கையில், ‘என்னை இந்த வழக்கில் சிக்க வைக்க, எனக்கு எதிராக கூட்டு சதி நடந்தது’ என்றார். இதுதொடர்பாக நேற்று திருவனந்தபுரத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் நிருபர்களிடம் கூறியதாவது:-
நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப்பிற்கு எதிரான சாட்சியங்களின் அடிப்படையில்தான் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. தன்னுடைய செயல்பாட்டை நியாயப்படுத்த திலீப் இவ்வாறு கூறி வருகிறார். அரசு எப்போதும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாகவே செயல்படும். தீர்ப்புக்கு எதிராக ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்படும். பொதுமக்களும், அரசும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக இருக்கும் போது காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைப்பாளரான அடூர் பிரகாஷ் எம்.பி. மேல் முறையீடு செய்வது தேவையற்றது என கூறி இருப்பது ஏன் என தெரியவில்லை. அவரது கருத்து காங்கிரஸ் கட்சியின் கருத்தாக கூட எடுத்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.