‘மேயாத மான்’, ‘ஆடை’, ‘குலு குலு’ படங்களை இயக்கிய ரத்னகுமார் ’29’ படத்தை இயக்கியிருக்கிறார்.
விது – ப்ரீத்தி அஸ்ராணி நடிக்கும் இப்படத்தை கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’, லோகேஷ் கனகராஜின் ‘ஜீஸ்குவாட்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
மாதேஷ் மாணிக்கம் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று (டிச.10) நடைபெற்றிருக்கிறது.
இதில் கலந்துகொண்டு பேசிய கார்த்திக் சுப்புராஜ்,” ‘மேயாத மான்’ எங்களுடைய முதல் தயாரிப்பு படம்.
ஸ்டோன் பெஞ்சில் 17 படம் எடுத்துவிட்டோம். ஆனாலும் ‘மேயாத மான்’ எங்களுக்கு ரொம்ப ஸ்பெஷலான படம்.
‘மேயாத மான்’, ‘ஆடை’ படம் எடுத்த பிறகு ’29’ படத்தின் கதையை எங்களிடம் ரத்னகுமார் சொன்னார்.
தனுஷ் சாருக்கு இந்த கதையை நாங்கள் சொல்லியிருந்தோம். ஆனால் அவர் “நான் இப்போது ஆக்ஷன் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறேன். கரியரின் ஆரம்பத்தில் நான் நடிக்கின்ற மாதிரியான கதையாக இது இருக்கிறது. அதனால் இளம் நடிகர்களை வைத்து படம் எடுத்தால் நன்றாக இருக்கும்” என்று சொன்னார்.
அதன் பிறகு ரத்னகுமாரும் வேறு படங்களை எடுக்க ஆரம்பித்துவிட்டார். கதைக்கு சரியானவர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதற்காக சில வருடங்களை எடுத்துகொண்டோம்.

பிறகு விதுவை நடிக்க வைக்கலாம் என்று ரத்னகுமார் சொன்னார். ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘ரெட்ரோ’ படங்களுக்கு முன்னால் விதுவை நடிக்க வைக்கிறேன் என்று சொல்லியிருந்தால் நான் ஓகே சொல்லியிருக்க மாட்டேன்.
அந்தப் படங்களில் விதுவின் நடிப்பைப் பார்த்ததால் ஓகே சொல்லிவிட்டேன்.
அதேபோல அயோத்தி படத்தில் ப்ரீத்தி அஸ்ராணியின் நடிப்பைப் பார்த்து ஓகே சொல்லிவிட்டேன். இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜூடன் இணைந்து தயாரிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்” என்று பேசியிருக்கிறார்.