`நாடோடிகள்’ பரணிக்கு கடந்த வாரம் வெளிவந்த ‘அங்கம்மாள்’ திரைப்படம் திரைத்துறையில் அவருக்கு மற்றுமொரு பிரேக் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
தாயின் ஓரவஞ்சனையை தனது அகத்திற்குள் பூட்டி வைத்து இறுக்கமாகவே இருக்கும் சுடலையாக நடித்து பார்வையாளர்களின் க்ளாப்ஸ்களை அள்ளி வருகிறார். அவரைச் சந்தித்தோம்.

மக்களுக்கும் படம் ரொம்பவும் பிடிச்சு போயிருக்கு!
“வணக்கம்ங்க, எனக்கு மறுபடியும் இந்தப் படம் பிரேக்னு சொல்லலாம். நான் என்னுடைய கரியர்ல நிறைய விஷயங்களை தவறவிட்டிருக்கேன். கிட்டத்தட்ட 12 படங்களை ஹீரோவாக நடிக்க வேண்டியது.
ஆனா, அதை மிஸ் பண்ணிட்டேன். அதுபோல, 40-க்கும் மேற்பட்ட படங்கள்ல துணை கதாபாத்திரத்துல நடிக்க வேண்டியது. இதெல்லாம் சில விஷயங்களால மிஸ் ஆகிடுச்சு. இந்தப் படத்தோட தயாரிப்பாளர் என்னுடைய நண்பர்தான். அவர் மூலமாகதான் இயக்குநர் விபின் என்கிட்ட வந்தாரு.
விபின் கதை சொல்லும்போது எனக்கு இதுல வசனங்கள் மிகக் குறைவுனு சொல்லித்தான் சொன்னாரு. ஆனா, நடிகராக முகபாவனைகள்ல கேரக்டருக்கு உயிர் கொடுக்க வேண்டியது என்னுடைய வேலைனு புரிஞ்சுகிட்டு நடிக்க ஒத்துகிட்டேன்.
பல சர்வதேச திரைப்பட விழாவிலும் இந்தப் படத்துக்கு பெரும் பாராட்டுகள் கிடைச்சது. இப்போ திரையரங்குகள்ல வெளியானப் பிறகு மக்களுக்கும் படம் ரொம்பவும் பிடிச்சு போயிருக்கு.” என நெகிழ்ச்சியாக பேசத் தொடங்கியவரிடம் அடுத்தடுத்து வினாக்கள் தொடுத்து உரையாடினேன்.
“இயல்பாகவே பரணி கலகலப்பான நபர்! ஆனால், ‘அங்கம்மாள்’ சுடலை இறுக்கமாவேதான் இருப்பார். இந்தக் கேரக்டரை நீங்க எப்படி புரிஞ்சுகிட்டீங்க?”
“சுடலைக்கு அம்மாவோட அரவணைப்பு இருக்காது. அம்மா நம்மகிட்ட ஓரவஞ்சனை காட்டுறாங்கனு மனசுக்குள்ள போட்டு அழுத்திக்கிற நபர். அந்த நேரத்துல அவனுடைய கோபத்தை வெளில காட்ட முடியாம இறுக்கமாக இருப்பான். ஊர்ல இருக்கிறவங்ககிட்ட அந்தக் கோபத்தைக் காமிப்பான். அதைத்தான் படத்துல அங்கம்மாளும் பவளத்துக்கிட்ட ஒரு முறை சொல்வாங்க.
அதே சமயம் அவனுக்கு அம்மாவை மாதிரியே மனைவியும் அமைஞ்சிடும். அவனுக்குள்ள பல விஷயங்கள் ஓடிட்டு இருக்கும். அவனுக்குள்ள இருக்கிற விஷயங்களை பிரதிபலிக்கும் கருவியாகத்தான் நாதஸ்வரத்தை இயக்குநர் வச்சிருக்காரு. இப்படியான புரிதலை கதை சொல்லும்போதே இயக்குநர் என்கிட்ட சொல்லிட்டாரு. அதற்கேற்ப நானும் எங்கும் வழக்கமான பரணியாக இருந்திடக்கூடாதுனு தீர்க்கமாக முடிவு செய்திட்டேன்.
ஷூட்டிங் ஸ்பாட்லகூட என்னுடைய சக நடிகர்கள்கிட்ட நான் கலகலப்பாக பேசமாட்டேன். அந்தக் கதாபாத்திரமாகவே திரையில கணக்கச்சிதமாக தெரியணும்னு இறுக்கமாகத்தான் இருப்பேன். இப்போ இந்தப் படத்தின் மூலமாக வசனங்கள் இல்லாம நடிக்கவும் பயின்றிருக்கேன்.”

“நாதஸ்வரம் வாசிக்க முறையாகக் கத்துக்கிட்டீங்கனு கேள்விப்பட்டோம்?!”
“அட ஆமாங்க! படம் சிங்க் சவுண்ட். அதனால எங்கும் ஏமாத்திட முடியாது. முதல்ல நானாக முயற்சி செய்யும்போது வெறும் காத்து மட்டும்தான் வந்துச்சு. அதனுடைய துளைகளை லாவகமாகப் பிடிக்கிறதுல தொடங்கி நிறைய விஷயம் அந்தக் கலையில இருக்கு. எனக்கு கத்துக் கொடுக்க திருநெல்வேலியில இருந்து வித்துவான் வந்தாரு. அவர்கிட்ட முழுமையாக நான்கு நாட்கள் பயிற்சி எடுத்தேன். இப்போ அந்தக் கலை மீது எனக்கு பெரிய மரியாதை ஏற்பட்டிருக்கு. இனிமேல், அந்தக் கலைஞர்களை நான் கரம் கூப்பிக் கும்பிடுவேன். நாம் அந்தக் கலைஞர்களைப் பத்தி இயல்பாக பேசி கடந்து போயிடுறோம். ஆனா, அப்படி கிடையாது. அவர்களுக்கான மரியாதையை நாம் கொடுத்தே ஆகணும்!”
“நீங்க நிஜ வாழ்க்கையில சந்திச்ச அங்கம்மாள்கள் பத்தியும், பவளங்கள் பத்தியும் பேசலாமா…”
“இருக்காதா பின்ன! எல்லோருடைய வீட்டிலும் ஒரு சுடலை இருப்பான். அதே சமயம் பவளமும் இருப்பான். காலையில இருந்து பயங்கரமாக உழைக்கிற ஒருவனுக்கு பெரிதளவுல கவனம் கிடைக்காது. அவங்களுக்குள்ள பெரிய வலிகள் இருக்கும். நிஜ வாழ்க்கையில நானும் ஒரு சுடலைதாங்க!”

“இயக்குநராகணும்னு கனவோட மதுரையில இருந்து சென்னைக்கு வந்திருக்கீங்க! உங்களை நடிகராக்கிய தருணம் எது?”
“என்னுடைய அத்தை ஷங்கர் சாரோட ஆபீஸ்ல ஆடிட்டராக இருந்தாங்க. அவங்ககிட்ட நிறைய கதைகள் சொல்லிட்டே இருப்பேன். அப்போ அவங்கதான் என்னை பாலாஜி சக்திவேல் சார் ஆபீஸுக்கு போகச் சொன்னாங்க. அங்க அவரிடம் கதை சொன்னப்போன என்னை அவர் பார்த்துட்டு நடிக்க வச்சாரு. அங்கிருந்துதான் நடிகர் பரணி உருவெடுத்தாப்ல!
எனக்குள்ள அந்த நடிகர் இருந்தால் நல்லதுனு நானும் யோசிச்சேன். அப்படி ஆக்சிடெண்டல் நடிகராகத்தான் சினிமாவுக்குள்ள வந்தேன். அங்கிருந்து என்னுடைய கனி அண்ணன் பார்த்துட்டு ‘நாடோடிகள்’ படத்துக்கு கூப்பிட்டாரு. சொல்லப்போனால், ‘நாடோடிகள்’ படத்துல நான் நடிச்சிருக்கிற கதாபாத்திரத்துல கனி அண்ணன்தான் நடிக்க வேண்டியது. அவருடைய சட்டையை எனக்குப் போட்டு அழகு பார்த்த மனுஷன் அவர்!
கனி அண்ணன் மாதிரியான குருநாதர்கள் அமைஞ்சதுதான் இப்போ சுடலை மாதிரியான அழுத்தமான கேரக்டர் செய்யுறதுக்கு முக்கியமான காரணம்.”
“உங்களுடைய கரியர்ல நீங்க நிறைய விஷயங்களை மிஸ் பண்ணிட்டதாக சொன்னீங்க. அதுக்கு காரணம் என்ன?”
“சினிமாவுல தேதி கொடுக்க முடியாம குளறுபடிகள் நடந்தால் பிரச்னைதான்! நீங்க சரியாக இருந்தாலும் சரியான நபர் உங்கூட இல்லைனா அது சில சமயங்கள்ல தவறாக மாறக்கூடும். எனக்கு சின்ன வயசுலேயே பெரிய பெரிய வாய்ப்புகள் கிடைச்சது. என்னுடைய முதல் திரைப்பட இசை வெளியீட்டு விழா மேடையில மணி ரத்னம் சார், ஷங்கர் சார், பாரதிராஜா ஐயானு பல ஜாம்பவான்கள் இருந்தாங்க. அந்த நிகழ்ச்சியை பார்த்திபன் சார் தொகுத்து வழங்கியிருந்தாரு. சட்டென வளர்ச்சியைப் பார்த்தா அந்த மாதிரியான சரிவு வரத்தான் செய்யும். ஆனா, அப்படியான சமயங்கள்ல எனக்கு விஜய் டிவி வாய்ப்பு கிடைச்சது.”

“அப்படி எந்தெந்த படங்களை நீங்க தவறவிட்டீங்க?”
“`‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்துல நான்தான் ஹீரோவாக நடிக்க வேண்டியது. அதுக்கு அட்வான்ஸ்லாம் வாங்கிட்டேன். தேதி கொடுக்க முடியாமல் அந்தப் படத்தை நான் பண்ணல. பிறகு, ‘மைனா’ படத்திலும் நான்தான் கதாநாயகனாக நடிக்க வேண்டியது. ஆனா, இதுல எனக்கு வருத்தம் கிடையாது. எனக்கு முன்னாடி சினிமாவுக்கு நடிக்க வந்தவங்க செய்த படங்கள் அது. அது அவங்களுக்கான சாப்பாடு! ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்துக்குப் பிறகு சேது அண்ணன் இன்னைக்கு இவ்வளவு பெரிய உயரத்துக்கு வந்திருக்காரு. அவங்களோட உழைப்பை நாம ஒரு பாடமாகத்தான் எடுத்துக்கணும். பரணி எப்போதும் பாசிட்டிவ்தாங்க! இப்போ நல்ல வாய்ப்புகள் வருது. இனிமேல் நம்ம சரியாக தேதி கொடுக்கணும். நம்மளே நேரடியாக பேசிடணும்.”
“‘நாடோடிகள்’ படத்தின் ‘சம்போ சிவ சம்போ’ பாடல்ல உங்களை அடிக்கிற காட்சியில உங்களுக்கு உண்மையாகவே அடிபட்டதாக கேள்விப்பட்டோம். இப்போதும் அதனுடைய வலிகள் இருக்குனு சொல்லியிருந்தீங்களே….”
“அந்தக் காட்சியில என்னை அடிக்க பைப்தான் பயன்படுத்தினாங்க. முதல்ல டம்மி பயன்படுத்தினோம். ஆனா, அது சரியாக வரல. நான் அப்போ எல்லாத்துக்கும் தயாராக இருந்தேன். அந்தக் காட்சி முடிஞ்சதும் நான் அப்படியே கீழ விழுந்துட்டேன். கனி அண்ணன் ஓடி வந்து என்னை பார்த்தாரு. அப்போ எனக்கு ஒண்ணுமில்ல. நாட்கள் போக போக என்னுடைய பின் தலை வலிக்க ஆரம்பிச்சது. அதெல்லாம் பெரிய விஷயம் கிடையாதுங்க. மெனக்கெடல் இல்லாம எதுவும் நமக்கு நிலைக்காது. சைட் எபெக்ட் இருந்தால் என்ன?! இன்னைக்கு அதை நினைவுல வச்சு பலரும் பேசுறாங்கள்ல, அது போதும்.”