Europe: விந்தணு தானம் செய்தவருக்கு கேன்சர் மரபணு; 197 குழந்தைகளின் நிலை என்ன? 

உலகம் முழுக்க குழந்தையின்மை பிரச்னை அதிகரித்து வருவதால், அதற்கான மருத்துவ சிகிச்சை முறைகளும் முன்னேறிக்கொண்டே வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் விந்தணு தானம்.

வெளிநாடுகளில் பரவலாக பின்பற்றப்பட்டு வரும் இந்த முறையில், விருப்பமுள்ள ஆண்கள் தங்கள் விந்தணுக்களை தானமாக வழங்குவர், குழந்தையின்மை பிரச்னை உள்ள பெண்கள், தங்களுடைய கணவருக்கு விந்தணுக்களில் பிரச்னை உள்ள பெண்கள் முகம் தெரியாத ஓர் ஆணின் விந்தணுக்களைப் பெற்று  கருத்தரித்து குழந்தை பெற்றுக்கொள்வார்கள்.

விந்தணு தானம்
விந்தணு தானம்

இந்த மருத்துவ தகவல்கள் நம் எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான். இப்போது இதைப்பற்றி பேசுவதற்கான காரணம், சமீபத்தில் ஐரோப்பாவை சேர்ந்த இளைஞர் ஒருவர், தான் கல்லூரி மாணவராக இருந்த காலத்தில் இருந்து கடந்த 17 வருடங்களாக விந்தணு தானம் செய்து வந்திருக்கிறார்.

இந்த தானம் செய்வதற்கு முன்னால் அவருடைய உடல்நலம் குறித்த அத்தனை பரிசோதனைகளிலும் அவர் ஃபிட்டாகவே இருந்திருக்கிறார்.

இந்தக் காரணத்தால்தான் அவர் தொடர்ந்து விந்தணு தானம் செய்து வந்திருக்கிறார். இந்த நிலையில், தற்போது அவருடைய உடல் செல்களில் ஒரு பிறழ்வு இருக்கிறது. இந்தப் பிறழ்வு அவருடைய TP53  என்ற மரபணுவை பாதித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சரி, இதனால் என்னவாகும் என்கிறீர்களா? இந்த மரபணுதான், நம் உடல் செல்களின் வளர்ச்சியை சரியாகக் கட்டுப்படுத்தும். இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால், செல்களின் அசாதாரண வளர்ச்சியைக் கட்டுக்குள் வைத்து நமக்கெல்லாம் புற்றுநோய் வராமல் காப்பாற்றுவது இந்த மரபணுதான்.

இந்த மரபணுவில்தான் அந்த ஆணுக்கு பிரச்னை இருந்திருக்கிறது. அதுவும் இந்த பிரச்னை அவருக்குப் பிறவியிலேயே இருந்திருக்கிறது. இது எதுவும் தெரியாமல்தான் அவர் விந்தணு தானம் செய்து வந்திருக்கிறார். இந்த மரபணு பிறழ்வை பரிசோதனைகளிலும் ஆரம்ப காலத்தில் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏனென்றால், இது ஓர் அரிய வகை மரபணு கோளாறு ஆகும்.

விந்தணு தானம்
விந்தணு தானம்

இந்த நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஐரோப்பாவில் இருக்கிற ஒரு விந்து வங்கி இந்த பிரச்னையை கண்டுபிடித்து அந்த நபரையும் அடையாளம் கண்டுவிட்டது.

இதன் பிறகு, இந்த ஆணிடம் பெற்ற விந்தணு தானம் மூலம் பிறந்த குழந்தைகளில் சிலருக்கு புற்றுநோய் வந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சில குழந்தைகள் புற்றுநோய் ஏற்பட்டு மரணமும் அடைந்திருக்கிறார்கள். தவிர, இவருடைய விந்தணுக்கள் மூலம் பிறந்தவர்களுக்கு அவர்களுடைய வாழ்நாளில் ஏதோ ஒருவகை புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதால், பலரும் அச்சத்திலும் மன வருத்தத்திலும் இருக்கிறார்கள்.

ஐரோப்பா முழுவதிலும் குறைந்தது 197 குழந்தைகளுக்காவது இவர் தந்தையாக இருப்பார் என்பதால், விந்தணு தானம் மூலம் குழந்தைப் பெற்ற குடும்பங்கள் மன அழுத்தத்தில் இருக்கின்றன.

 கவனம் மக்களே இப்படியும் ஒரு பிரச்னை இருக்கிறது!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.