KKR: ரசலுக்கு மாற்று யார்? இடத்தை பிடிக்க தயாராகும் 3 அதிரடி வீரர்கள்!

இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் மிகவும் மிரட்டலான ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஆண்ட்ரே ரசல் (Andre Russell), ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 12 சீசன்கள் விளையாடி, இரண்டு முறை கோப்பையை வென்று தந்த இந்த இவர், இனி களத்தில் இறங்கி சிக்ஸர் மழை பொழியப்போவதில்லை. இருப்பினும், கேகேஆர் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், ரசல் அணியை விட்டு முழுமையாக விலகவில்லை. 2026 ஐபிஎல் தொடருக்கான கேகேஆர் அணியின் Power Coach ஆக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். ரசல் விட்டுச்சென்ற அந்த பிரம்மாண்டமான இடத்தை நிரப்பப்போவது யார்? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. 

Add Zee News as a Preferred Source

மார்கோ யான்சன் (Marco Jansen) – தென்னாப்பிரிக்கா

பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய மார்கோ யான்சன், அடிப்படையில் ஒரு வேகப்பந்து வீச்சாளர். ஆனால், சமீபகாலமாக இவரது பேட்டிங் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. 6 அடி 8 அங்குலம் உயரம் கொண்ட இவர், தனது நீண்ட கைகளை பயன்படுத்திப் பந்துகளை எளிதாக மைதானத்திற்கு வெளியே அடிக்கிறார். சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வெறும் 17 பந்துகளில் 54 ரன்கள் விளாசி தனது பேட்டிங் திறனை உலகுக்கு காட்டினார். பந்துவீச்சில் விக்கெட்டுகளை வீழ்த்துவது மட்டுமின்றி, கடைசி நேரத்தில் களமிறங்கி ரசல் பாணியில் சிக்ஸர்களை பறக்கவிடும் திறன் இவரிடம் உள்ளது. 25 வயதான இவர், 2026 ஐபிஎல் தொடரில் ஒரு முழுமையான ஆல்ரவுண்டராக ஜொலிக்க வாய்ப்புள்ளது.

கேமரூன் கிரீன் (Cameron Green) – ஆஸ்திரேலியா

ஆண்ட்ரே ரசலுக்கு சரியான மாற்று வீரர் என்று பலரும் கைகாட்டுவது ஆஸ்திரேலியாவின் கேமரூன் கிரீன். ஜாக் காலிஸ், ஆண்ட்ரே ரசல் வரிசையில் கேகேஆர் அணிக்கு தேவைப்படும் மிகச்சிறந்த ‘சீம் பவுலிங் ஆல்ரவுண்டர்’ இவர் தான். இவரால் 140 கி.மீ வேகத்தில் பந்துவீச முடியும். அதேசமயம், தொடக்க வீரராகவோ அல்லது மிடில் ஆர்டரிலோ களமிறங்கி அதிரடியாக ரன் குவிக்க முடியும். ஐபிஎல் 2026 ஏலத்தில் இவருக்கு பெரிய கிராக்கி இருக்கும். ரசல் விட்டுச்சென்ற இடத்தை நிரப்ப, கேகேஆர் நிர்வாகம் இவரை பெரிய தொகை கொடுத்து ஏலத்தில் எடுக்க வாய்ப்புள்ளது.

ரொமாரியோ ஷெப்பர்ட் (Romario Shepherd) – வெஸ்ட் இண்டீஸ்

ரசலை போலவே வெஸ்ட் இண்டீஸ் மண்ணை சேர்ந்த மற்றொரு பவர் ஹிட்டர் ரொமாரியோ ஷெப்பர்ட். உடல்வாகிலும், ஆட்டத்திறனிலும் இவர் ரசலை நினைவுபடுத்துகிறார். மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ அணிகளுக்காக விளையாடியுள்ள இவர், டெத் ஓவர்களில் பந்துவீசுவதிலும், கடைசி சில ஓவர்களில் களமிறங்கி சிக்ஸர் அடிப்பதிலும் வல்லவர். ஒருவேளை கேகேஆர் அணி, ரசலை போன்றே ஒரு கரீபியன் வீரரைத் தேடினால், ஷெப்பர்ட் மிகச்சிறந்த தேர்வாக இருப்பார்.

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.