`93 பேர் மட்டுமே வசிக்கும் மாஞ்சோலையில் 1,100 வாக்காளர்கள் பதிவேற்றம்?' – அலுவலர்களுக்கு நோட்டீஸ்

நெல்லை மாவட்டம், பாம்பே பர்மா டிரேடிங் கம்பெனி சார்பில் மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு ஆகிய பகுதிகளில் தேயிலை, காபி பயிர் செய்யப்பட்டுள்ளன. இந்தப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும். இந்த வனப்பகுதி, ஆங்கிலேயர் ஆட்சியின் போது 99 ஆண்டுகள், பிபிடிசி நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டது. இந்த குத்தகைக்காலம் வரும் 2029-ம் ஆண்டுடன் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு மாஞ்சோலை வனப்பகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படுகிறது.

மாஞ்சோலை தேயிலை தோட்டம்

இதற்கக அந்த தேயிலைத் தோட்டங்களில் குடும்பத்துடன் பணிபுரிந்து வசித்து வந்த 4 ஆயிரம் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டது. இடம்பெயரும் தோட்டத் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு திட்டங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வீடுகள், நிலங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால், தொழிலாளர்கள் பலரும் இடம் பெயர்ந்துவிட்ட நிலையில், தற்போது 93 பேர் மட்டுமே மாஞ்சோலையில் வசித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் கடந்த நவம்பர் 4-ம் தேதி தொடங்கி நாளையுடன் (14-ம் தேதி) முடிவடைகிறது.

இந்த நிலையில், மாஞ்சோலையில் 1,100-க்கும் அதிகமானோர் உள்ளதாக வாக்காளர் படிவங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த புகார், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் அலுவலரின் கவனத்திற்கு தெரிய வந்தது. இதனையடுத்து அம்பாசமுத்திரம் தொகுதி தேர்தல் அலுவலரும் சேரன்மகாதேவி சப் கலெக்டருமான ஆயுஷ் குப்தா 1,100 வாக்காளர்களை பதிவேற்றம் செய்த 98 முதல் 102 எண் வரை என 5 வாக்குச்சாவடிகளின் நிலை அலுவலர்களுக்கு விளக்கம் கேட்டு தனித்தனியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார். குறிப்பாக ஊத்து பகுதியில் ஒருவர் கூட வசிக்கவில்லை.

மாஞ்சோலை

ஆனால், அந்த பாகத்தில் 63 பேர் வசிப்பதாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. வீடு, வீடாகச் சென்று படிவங்களை வழங்கி திரும்பப்பெற வேண்டும் என்ற விதிமுறை அங்கு வசிக்காத நபர்களிடமும், தெற்கு பாப்பான்குளம், ரெட்டியார்பட்டி ஆகிய இடங்களில் அரசு வழங்கிய வீடுகளைப் பெற்று குடி பெயர்ந்தவர்களிடமும், சொந்த ஊர்களுக்குச் சென்றவர்களிடமும் படிவங்கள் வழங்கப்பட்டு பி.எல்.ஓ செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 7 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.   

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.