நந்தமுரி பாலகிருஷ்ணா – போயப்பாட்டி ஶ்ரீனு கூட்டணியில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான ‘அகண்டா’ படத்தின் சீக்குவல் பாகமான ‘அகண்டா 2: தாண்டவம்’ இப்போது திரைக்கு வந்திருக்கிறது.
பாலமுரளி கிருஷ்ணாவின் (பாலகிருஷ்ணன்) மகள் ஜனனி (ஹர்ஷாலி மல்ஹோத்ரா) இந்தப் பாகத்தில் வளர்ந்து விஞ்ஞானியாக இருக்கிறார். ஜனனிக்கு ஒரு பிரச்னையென்றால் மீண்டும் வருவேன் என முதல் பாகத்தில் வாக்குக் கொடுத்த அகண்டா (பாலகிருஷ்ணன்) இந்தப் பாகத்தின் தொடக்கத்திலேயே தவம் செய்யத் தொடங்குகிறார்.
சிறு வயதிலேயே பெரிய, பெரிய சாதனைகளை நிகழ்த்தும் ஜனனி நோய்களைத் தடுக்கும் ஒரு மருந்தையும் கண்டுபிடிக்கிறார். அங்கு அவருக்கு ஆசிரியராக இருக்கிறார் மற்றொரு விஞ்ஞானி அர்ச்சனா (சம்யுக்தா).

இந்திய ராணுவம் தனது மகனைக் கொன்றுவிட்டதால் இந்தியா மீது பகை கொண்டு பழிவாங்கும் நோக்கத்தில் சீன தளபதி, மகா கும்ப மேளா நிகழ்வில் வைரஸ் ஒன்றைப் பரப்பி பயோ போர் தொடுக்க முயற்சிக்கிறார்.
அந்த வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக அர்ச்சனா, ஜனனி உட்பட சில விஞ்ஞானிகள் தடுப்பூசி ஒன்றையும் கண்டுபிடிக்கிறார்கள். சீனாவின் செயல்களுக்கு ஆதரவாகச் செயல்படும் இந்திய அரசியல்வாதி அஜித் தாக்கூர் (கபீர் துகன் சிங்) தடுப்பூசியுடன் விஞ்ஞானிகள் குழுவையும் சேர்த்து அழிக்க முயற்சிக்கிறார்.
அகண்டா தவத்திலிருந்து எழுந்து வந்து ஜனனியையும், இந்தியாவையும் எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதை இயக்குநர் போயபட்டி ஶ்ரீனு ஆக்ஷன் தாண்டவமாடி இதில் சொல்லியிருக்கிறார்.
பாலமுரளி கிருஷ்ணா, அகண்டா என இரட்டை வேடங்களுக்கு ஆக்ஷன், பன்ச் வசனம் உள்ளிட்ட தனது டிரேட்மார்க் விஷயங்களால், கதாபாத்திரத்தின் மசாலா தன்மையைக் கூட்டி ‘ஐ எம் தி பவர்ஃபுல்’ என நிரூபிக்கிறார் நந்தமுரி பாலகிருஷ்ணா.
ஒவ்வொரு பன்ச் வசனங்களுக்குப் பிறகும் பேசும் ஆங்கிலம், மிகை எக்ஸ்பிரஷன்கள் ஆகியவற்றால் திரையரங்கத்தை பிளாஸ்ட் மோடுக்கும் கொண்டுசென்றிருக்கிறார்.
ரெளடிகளை அடித்துப் பறக்கவிடும் பாலமுரளி கிருஷ்ணா 1000 வாலா பட்டாசு என்றால், ராணுவ வீரர்கள், ரோபோட்களை அடித்துத் தூளாக்கும் அகண்டா 10000 வாலா!

ஒரு பாடல், சொற்ப காட்சிகளில் மட்டுமே வந்து போகும் சம்யுக்தாவிற்கு நடிப்பில் பெரியளவில் வேலை இல்லை.
சிறிது நேரம் வந்தாலும் தனது உடல்மொழி, முகபாவனைகளால் கவர்கிறார் ஆதி பினிஷெட்டி. ஆனால், வலுவின்றி எழுத்தப்பட்டிருக்கும் இவரின் கதாபாத்திரம் ஆதியின் நடிப்பை வீணடித்திருக்கிறது.
படத்தின் முக்கிய எமோஷனைத் தாங்கிப் பிடிக்கும் ஹர்ஷாலி மல்ஹோத்ரா தனது கதாபாத்திரம் கோரும் அழுத்தமான நடிப்பை எட்டிப் பிடிக்காதது ஏனோ!
டெம்ப்ளேட் அரசியல்வாதி, வெளிநாட்டு வில்லன் கதாபாத்திரங்களில் கபீர் துகன் சிங், சஸ்வதா சாட்டர்ஜி ஆகியோர் டீசண்ட் ரக நடிப்பை வழங்கிச் செல்கிறார்கள்.
பெரும்பாலான பகுதிகள் க்ரீன் மேட்டில் படம் பிடிக்கப்பட்டாலும் பாலையாவின் மாஸ் உடல்மொழிக்குத் தனது ஃப்ரேம்களால் பவர் கூட்டியதோடு, லைட்டிங்கில் கலர்ஃபுல் தீபங்களையும் ஏற்றி ஆரத்தி எடுக்கிறார்கள் ஒளிப்பதிவாளர்கள் ராம் பிரசாத், சந்தோஷ் டீடேக்.
மராத்தான் ரக வேகத்தில் நகர வேண்டிய திரைக்கதையை இத்தனை பொறுமையாக படத்தொகுப்பாளர் தம்மிராஜு கோத்திருப்பது, நம்மைத் தாலாட்டு விஷயம்ரா! கதையிலிருந்து ‘வர்டா டூர்ர்…’ என ஓடி, களத்திற்குத் தொடர்பில்லாத விஷயங்களை ஓவர்டோஸில் பேசுவதையாவது அவர் தடுத்து நிறுத்தியிருக்கலாம்.
தமன் இசையில் பாடல்கள் திரையரங்கை திருவிழாக் கோலமாக மாற்றினாலும், அந்தப் பாடல்களையெல்லாம் எங்கோ கேட்டிருக்கிறோமோ என உணர்வையே தருகின்றன. ஆக்ஷன் காட்சிகளை முடித்துவிட்டு களைப்பின்றி மாஸ் நடைபோடும் அகண்டாவுக்குப் பின்னணி இசையால் பூஸ்ட் கொடுக்கத் தவறியிருக்கிறார் தமன்.

டெம்ப்ளேட் ரக மெட்டுகளை மட்டுமே தனது லைப்ரரியிலிருந்து கொடுத்திருக்கும் தமன், இம்முறை விருந்து படைக்காதது பெரும் ஏமாற்றம்.
பெரும்பாலான இடங்களில் கச்சிதமான வடிவில் வடிவமைக்கப்பட்டிருக்கும் கிராபிக்ஸ், பனி படர்ந்த இந்திய எல்லைப் பகுதி நிலங்களின் உணர்வைக் நமக்கு கடத்துகிறது. ஆனால், பொம்மைகளாக விரிந்து நிற்கும் ஓரிரு கிராபிக்ஸ் காட்சிகளைக் கண்டும் காணாமல் சென்றிருப்பது மைனஸ்!
உப்பு, காரம் என இந்த டோலிவுட் சினிமாவின் ஆக்ஷன் காட்சிகளுக்கு பல்வகை சேர்மானங்களைச் சேர்த்து படையல் வைக்க முயன்றிருக்கிறார்கள் ஆக்ஷன் இயக்குநர்கள் ராம் லக்ஷ்மண். ஆனால், அதன் ருசி சுமார்தான்!
ஆக்ஷன், பன்ச், எமோஷன் என பாலையா ‘வுட்’ சினிமாவின் அத்தனை விஷயங்களையும் கலந்துகட்டி கதையைப் பின்னியிருக்கிறார் இயக்குநர் போயபட்டி ஶ்ரீனு.
நிதானமாக கதைக்குள் நகரத் தொடங்கினாலும், பாலையாவின் மாஸ் இன்ட்ரோ நம்மைத் தட்டியெழுப்பி டஜன் எனர்ஜிகளைக் கொடுத்து விசில் பறக்கவைக்கிறது. அதிலும் எம்.ஜி.ஆர் – என்.டி.ஆர் ரெஃபரென்ஸ், ஜெய் பாலையா பாடல் ரெஃபரன்ஸ் ஆகியவை ப்ளாஸ்ட் ப்ளாஸ்ட்!
ஆனால், அங்கிருந்து ‘ஐ அம் தி ட்ரபிள்’ எனக் கதை தானாகவே சிக்கல்களுக்கு மேல் சிக்கல்களில் சிக்கிச் சறுக்கல் பாதைக்கு டூர் அடிக்கிறது.

லாஜிக் எதிர்பார்க்காமல் கடந்துசென்றாலும் அழுத்தமில்லாத பின் கதைகள் ‘ஜெய் பாலையா’ எனக் கோஷம் போட்டுக்கொண்டிருந்த பார்வையாளர்களை ‘பை பை’ சொல்ல வைக்கின்றன.
இப்படியான வழக்கொழிந்த எழுத்தால், இரண்டாம் பாதியின் மாஸ் காட்சிகளும் ஃப்யூஸ் போய்விடுகின்றன. அத்தோடு படத்தின் கதைக்குத் துளியும் சம்மந்தமில்லாமல் மெசேஜ்களைத் திணிக்கும் வகையில் க்ளாஸ் எடுப்பது யாருக்காக, எதற்காக?!
மாஸ் சினிமாவில் சில ஆன்மீக டச். ஆனால், திடீரென வலதுசாரி பிரசார சினிமா ரூட்டைப் பிடித்து வெறுப்பரசியலைத் தூண்டுவது தவறான செயல். ஆன்மீகத்தையும் அறிவியலையும் ஒரே கோட்டில் இணைத்துச் சொல்லும் விஷயத்தில் முழுமையும், தெளிவும் இல்லை.
வழக்கமான பாலையா சினிமாவுக்கான விஷயங்கள் இதில் இருந்தாலும் வலுவின்றி எழுத்தப்பட்டிருக்கும் எழுத்தாலும், தவறான அரசியல் பேசியதனாலும் வழி தவறி மலையேற முடியாமல் சறுக்கி இருக்கிறார் இந்த அகண்டா 2!