Messi Tour of India: "நிகழ்ச்சி திட்டமிடலில் AIFF ஈடுபடவில்லை" – இந்திய கால்பந்து கூட்டமைப்பு

கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி கலந்துகொண்ட கொல்கத்தா நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் நிர்வாக குளறுபடிகள் குறித்து அகில இந்திய கால்பந்து சம்மேளனம் (AIFF) இன்று (சனிக்கிழமை) கவலை தெரிவித்துள்ளது.

Messi Tour of India

மெஸ்ஸியைக் காண நுழைவுச்சீட்டுக்கு ரூ.4,000 முதல் ரூ.12,000 வரை கட்டணம் செலுத்தி, கொல்கத்தாவின் சால்ட் லேக் மைதானத்தில் குவிந்த சுமார் 50,000 பார்வையாளர்கள் ஏமாற்றமடைந்தனர். சிலர் கள்ளச்சந்தையில் ரூ.20,000 வரைக்கூட கொடுத்து வாங்கியிருந்தனர்.

ஆனால் மைதானத்தில் அரசியல்வாதிகள், விவிஐபிக்கள் (VVIPs), பாதுகாப்புப் பணியாளர்கள் உள்ளிட்டோர் மெஸ்ஸியைச் சுற்றிக் கூடி நின்று, அவசர அவசரமாக செல்ஃபிகள் எடுத்ததால் அவர் முகத்தைக்கூட பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஏமார்ந்தனர்.

AIFF விளக்கம்

இதுகுறித்து அகில இந்திய கால்பந்து சம்மேளனம் (AIFF) வெளியிட்ட அறிக்கையில், “உலகக் கால்பந்து நட்சத்திரங்களான லியோனல் மெஸ்ஸி, லூயிஸ் சுவாரஸ் மற்றும் ரோட்ரிகோ டி பால் ஆகியோரைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்ட விவேகானந்தா யூபா பாரதி கிரிங்கன் மைதானத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து அகில இந்திய கால்பந்து சம்மேளனம் ஆழ்ந்த கவலை கொள்கிறது” என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், “இது ஒரு தனியார் பி.ஆர். ஏஜென்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு. இந்த நிகழ்வின் அமைப்பு, திட்டமிடல் அல்லது செயலாக்கம் என எந்தவொரு செயலிலும் AIFF ஈடுபடவில்லை. மேலும், நிகழ்வு பற்றிய விவரங்கள் AIFF-க்குத் தெரிவிக்கப்படவில்லை. கூட்டமைப்பிடமிருந்து எந்த அனுமதியும் பெறப்படவில்லை” என்றும் AIFF மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தியுள்ளது.

மைதானத்தை நாசமாக்கிய ரசிகர்கள்

மெஸ்ஸியை காண முடியாததால் ஆவேசமடைந்த ரசிகர்கள், விளையாட்டு மைதானங்களுக்குள் பாட்டில்களை வீச ஆரம்பித்தபோதுதான் குழப்பம் தொடங்கியது. மைதானத்துக்குள் உணவுப் பொட்டலங்கள் உட்பட இதுபோன்ற பொருட்கள் எப்படி அனுமதிக்கப்பட்டன என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சிறிது நேரத்திலேயே, ஆத்திரமடைந்த ரசிகர்கள் நாற்காலிகளைப் பிடுங்கி வீசத் தொடங்கினர்.

மைதானத்தின் தரைப்பகுதி மற்றும் செயற்கை ஓடுபாதையில் ஃபைபர் கிளாஸ் இருக்கைகள் உடைந்து கிடந்தன. மெஸ்ஸிக்காகவும், முதலமைச்சர் பிரிவுக்காகவும் அமைக்கப்பட்டிருந்த இரண்டு பந்தல்களும் கிழித்து எறியப்பட்டன. போலீசார் தலையிடுவதற்கு முன்பு, அவற்றின் சில பகுதிகளில் தீ வைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. பல நுழைவு வாயில்கள் சேதப்படுத்தப்பட்டன. வீரர்கள் சுரங்கப்பாதையின் கூரை தாக்கப்பட்டது. சுவரொட்டிகளும் கிழிக்கப்பட்டன.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.