காசா சிட்டி,
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.
இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தியது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டது. 2 ஆண்டுகள் நடந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், காசா முனையில் இஸ்ரேல் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. காசா சிட்டியில் சென்ற காரை குறிவைத்து டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஹமாஸ் ஆயுதக்குழுவின் முக்கிய தளபதி ரயிட் சயத் கொல்லப்பட்டார். மேலும், ஹமாஸ் ஆயுதக்குழுவை சேர்ந்த மேலும் 4 பேர் உயிரிழந்தனர். கொல்லப்பட்ட ஹமாஸ் தளபதி ரயிட் சயத் 2023 அக்டோபர் 7ம் தேதி நடந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.