நாளை அனல் பறக்கப்போகும் ஐபிஎல் ஏலம்! இந்த 5 விக்கெட் கீப்பர்களுக்கு ஜாக்பார்ட்!

ஐபிஎல் 2026க்கான மினி ஏலம் நாளை டிசம்பர் 16 அன்று அபுதாபியில் நடைபெறவுள்ளது. இந்த ஏலத்தில் அணிகள் தங்கள் அணியின் குறைகளை சரிசெய்ய திட்டமிட்டுள்ளன. வழக்கமாக ஆல்-ரவுண்டர்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களுக்குத் தான் மவுசு அதிகம் இருக்கும். ஆனால், இம்முறை ‘விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன்’ இடத்திற்குத்தான் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெறும் விக்கெட் கீப்பிங் மட்டுமின்றி, பேட்டிங்கிலும் கலக்கும் திறன் கொண்ட வீரர்களுக்குத்தான் டிமாண்ட் அதிகம். இந்த ஏலத்தில் அணிகளால் அதிகம் குறிவைக்கப்பட வாய்ப்புள்ள 5 முக்கிய விக்கெட் கீப்பர்கள் யார் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

Add Zee News as a Preferred Source

குயின்டன் டி காக் (Quinton de Kock)

தென்னாப்பிரிக்காவின் அனுபவம் வாய்ந்த இடது கை ஆட்டக்காரர் குயின்டன் டி காக். ஐபிஎல்லில் பல அணிகளுக்காக விளையாடிய அனுபவம் கொண்டவர் இவர். பவர்பிளேயில் அதிரடியான தொடக்கத்தை அளிப்பதில் வல்லவர். விக்கெட் கீப்பிங்கிலும் மிகவும் நிதானமானவர். சமீபத்திய இந்திய தொடரிலும் சிறப்பாக விளையாடி இருந்தார். ஒரு நிலையான ஓப்பனிங் பேட்ஸ்மேன் மற்றும் கீப்பர் தேவைப்படும் அணிகளுக்கு இவர் முதல் தேர்வாக இருப்பார்.

ஜானி பேர்ஸ்டோ (Jonny Bairstow)

இங்கிலாந்தின் அதிரடி ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோ முதல் பந்திலிருந்தே பவுலர்களை பந்தாடும் திறன் கொண்டவர். முதல் 6 ஓவர்களில் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர். ஐபிஎல் களத்தில் ஏற்கனவே தனது திறமையை நிரூபித்துள்ளார். அதிரடியான வெளிநாட்டு ஓப்பனிங் கீப்பரை தேடும் அணிகள் இவரை தவற விடுவார்களா என்பது சந்தேகமே.

கே.எஸ். பரத் (KS Bharat)

இந்திய அணியின் நம்பகமான விக்கெட் கீப்பர் கே.எஸ். பரத். வெளிநாட்டு வீரர்களை அதிகம் சார்ந்திருக்க விரும்பாத அணிகளுக்கு இவர் பொக்கிஷம். மிக சிறந்த விக்கெட் கீப்பிங் திறன் மற்றும் மிடில் ஆர்டரில் பொறுப்பான பேட்டிங் செய்யக்கூடியவர். வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்களை பந்துவீச்சாளர்களுக்கு ஒதுக்க நினைக்கும் அணிகள், ஒரு தரமான இந்திய கீப்பராக இவரை தேர்வு செய்யலாம்.

ஜேமி ஸ்மித் (Jamie Smith)

இங்கிலாந்தின் இளம் ரத்தம் ஜேமி ஸ்மித் ஆஷஸ் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார். டி20 கிரிக்கெட்டில் வேகமாக வளர்ந்து வரும் இவர் எந்த இடத்திலும் இறங்கி அதிரடியாக விளையாடும் திறன் கொண்டவர். நீண்ட கால அடிப்படையில் ஒரு நல்ல கீப்பரை உருவாக்க நினைக்கும் அணிகள் இந்த துடிப்பான இளைஞரைத் தேர்வு செய்யலாம்.

ஜோஷ் இங்லிஸ் (Josh Inglis)

ஆஸ்திரேலியாவின் அதிரடி மன்னன் ஜோஷ் இங்லிஸ், வேகப்பந்து வீச்சை வெளுத்து வாங்குவதில் கில்லாடி. மிடில் ஆர்டர் மற்றும் டெத் ஓவர்களில் ரன் குவிப்பை வேகப்படுத்தும் திறன் இவருக்கு உள்ளது. அதிரடியான ‘இம்பாக்ட் பிளேயர்’ தேவைப்படும் அணிகளுக்கு இவர் சரியான தேர்வு. நாளை நடக்கும் ஏலத்தில், இந்த 5 வீரர்களுக்கும் பல கோடி ரூபாய் கொட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எந்த அணி யாரை தட்டி தூக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.