IPL 2026 : ஐபிஎல் 2026 தொடருக்கான மினி ஏலம் இன்று அபுதாபியில் நடக்கிறது. கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய திருவிழாவில் கலந்து கொள்ளப்போகும் பிளேயர்கள் யார்? யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது? எந்த பிளேயர்களுக்கு எல்லாம் பணமழை கொட்டப்போகிறது என்பது இன்று தெரிந்துவிடும். அதேநேரத்தில் ஐபிஎல் 2026 போட்டிகள் தொடங்கப்போகும் தேதிகள் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. ஐபிஎல் 2026 தொடரானது மார்ச் 26ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கவுள்ளது என்றும், இதன் இறுதிப் போட்டி மே 31ஆம் தேதி நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு சுமார் இரண்டு மாதங்களுக்கு மேல் விறுவிறுப்புக்குக் குறைவில்லாத கிரிக்கெட் விருந்து காத்திருக்கிறது.
Add Zee News as a Preferred Source
அபுதாபியில் வெளியான அறிவிப்பு:
ஐபிஎல் 2026 சீசன் எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கு, டிசம்பர் 15 மாலை அபுதாபியில் ஐபிஎல் உரிமையாளர்கள் பங்கேற்ற கூட்டத்தில் பதில் கிடைத்துள்ளது. கிரிக்பஸ் செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, ஐபிஎல்-லின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஹேமாங் அமீன் அவர்கள் ஏலத்திற்கு முந்தைய சந்திப்பின்போது இந்தத் தேதிகளை சூசகமாக தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் தொடங்குமா?
ஐபிஎல் மரபின்படி, முந்தைய சீசனில் வெற்றி பெற்ற அணிகள் இருக்கும் நகரத்திலேயே அடுத்த சீசனின் முதல் போட்டி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, ஐபிஎல் 2025 சீசனின் நடப்புச் சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் தான் ஐபிஎல் 2026 சீசனின் முதல் போட்டி நடைபெற வேண்டும்.
ஆனால், சின்னசாமி மைதானம் குறித்த ஒரு சஸ்பென்ஸ் நீடிக்கிறது. கடந்த ஜூன் 4ஆம் தேதி, ஆர்.சி.பி.யின் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான நெரிசலில் 11 ரசிகர்கள் உயிரிழந்த சோக நிகழ்வின் காரணமாக, கர்நாடக மாநில அரசு அந்த மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. இதன் காரணமாகவே, பிசிசிஐ மகளிர் உலகக் கோப்பை போட்டிகளைக்கூட வேறு நகரங்களுக்கு மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.
இருப்பினும், கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்துள்ளார். அண்மையில் இது குறித்து பேசிய அவர், “ஐபிஎல் போட்டிகள் பற்றி நாங்கள் முடிவு எடுத்துள்ளோம். நாங்கள் இதில் சாதகமாக இருக்கிறோம். எங்கள் உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா அவர்களை கே.எஸ்.சி.ஏ. (கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம்) அதிகாரிகளுடன் பேசி முடிவெடுக்கச் சொல்லி இருக்கிறோம்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு மற்றும் இதர தேவைகளைப் பூர்த்தி செய்தால், சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த மாநில அரசு நிபந்தனையுடன் கூடிய ஒப்புதலை அளித்துள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆகவே, ஐபிஎல் 2026 சீசனின் முதல் போட்டி பெங்களூருவில் நடக்குமா அல்லது வேறு நகரத்திற்கு மாறுமா என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும், ஆர்சிபி தான் நடப்புச் சாம்பியன் என்பதால், முதல் போட்டி ஆர்சிபி ஆடும் போட்டியாகவே இருக்கும் என்பது மட்டும் உறுதி.
இன்று நடக்கும் ஐபிஎல் 2026 மினி ஏலம்: முக்கிய அம்சங்கள்
ஐபிஎல் 2026 தொடர் குறித்த அறிவிப்புகள் ஒருபுறம் இருக்க, இன்று டிசம்பர் 16, செவ்வாய்க்கிழமை அபுதாபியில் உள்ள கோக்கோ-கோலா அரங்கத்தில் பிற்பகல் 1:00 மணிக்கு மிக முக்கியமான மினி ஏலம் நடைபெற உள்ளது.
ஏலத்தின் எதிர்பார்ப்புகள்:
இந்த ஏலத்தில் 333 வீரர்கள் பங்கேற்கின்றனர். இதில் 214 இந்திய வீரர்கள், 119 வெளிநாட்டு வீரர்கள். 10 அணிகளிலும் மொத்தமாக 77 இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன. இதில் அதிகபட்சமாக 30 வெளிநாட்டு வீரர்களை மட்டுமே தேர்வு செய்ய முடியும். ஒவ்வொரு அணிக்கும் வீரர்களை வாங்குவதற்காகக் கொடுக்கப்பட்டுள்ள மொத்தத் தொகை ரூ.100 கோடி. பஞ்சாப் கிங்ஸ் அணி அதிகபட்சமாக ரூ.29.1 கோடி வைத்துள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி குறைந்தபட்சமாக ரூ.13.15 கோடி வைத்துள்ளது.
அதிர்ஷ்டம், பணமழை யாருக்கு?
ஆஸ்திரேலியா பிளேயர்கள் பெரும் தொகையை ஈட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மிட்செல் ஸ்டார்க் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் ரூ.15 கோடிக்கும் மேல் ஏலம் போக வாய்ப்புள்ளது. இந்தியாவின் ஹர்ஷல் படேல், ஷர்துல் தாக்கூர் மற்றும் நியூசிலாந்தின் டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திரா போன்றோர் மீது அதிக கவனம் இருக்கும்.
About the Author

Karthikeyan Sekar
Karthikeyan Sekar
…Read More