மகாத்மா காந்தியின் பெயரில் உள்ள திட்டத்தை மாற்றுவது ஏன்? மத்திய அரசுக்கு பிரியங்கா கேள்வி

புதுடெல்லி,

கிராமப்புறங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 100 நாள் வேலை வழங்கும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை, பெயர் மாற்றி ஆண்டுக்கு 125 நாட்கள் வேலை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தின் பெயர் “விக்சித் பாரத் – ரோஜ்கர் மற்றும் அஜீவிகா மிஷன் (கிராமின்”) என்பதாகும். இந்த புதிய மசோதா, பழைய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை ரத்து செய்யவும் பரிந்துரைக்கிறது.

இந்த புதிய மசோதா ஒவ்வொரு நிதியாண்டிலும் 125 நாட்கள் ஊதிய வேலைவாய்ப்புக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிப்பதன் மூலம், விக்சித் பாரத் 2047 என்ற தேசிய தொலைநோக்குப் பார்வைக்கு இணக்கமான ஒரு கிராமப்புற மேம்பாட்டு கட்டமைப்பை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது பற்றிய சுற்றறிக்கை எம்.பி.க்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இந்த புதிய மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுகுறித்துப் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி மக்களவையில் பேசியதாவது: – மகாத்மா காந்தியின் பெயரில் உள்ள திட்டத்தை மாற்றுவது ஏன்? அதிக ஊதியம், அதிக வேலை நாள்கள் என்று கூறுவது மக்களின் ஏமாற்றுவதற்கே. இந்த மசோதா கிராம பஞ்சாயத்துகளின் அதிகாரத்தை பலவீனப்படுத்துகிறது.

இது தற்போதைய வடிவில் ஏற்றுக்கொள்ள முடியாதது. மேலும் மாநிலங்கள் 40% நிதியளிக்கக் கூறும் இந்த மசோதா அதிகாரத்துவமிக்கது. .அவையின் ஆலோசனையைப் பெறாமல் எந்த விவாதமும் நடத்தாமல் இந்த மசோதாவை அவசரமாக நிறைவேற்றக் கூடாது. இந்த மசோதாவைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, அரசாங்கம் ஒரு புதிய மசோதாவைத் தாக்கல் செய்ய வேண்டும். மகாத்மா காந்தி என் குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல, ஆனாலும் அவர் என் குடும்ப உறுப்பினர் போன்றவர். காந்தி ஒட்டுமொத்த தேசத்தின் உணர்வு. இந்த மசோதா மேலும் விரிவாக விவாதிக்கப்படுவதற்காக நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்பப்பட வேண்டும்”என்று பேசினார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.