மீண்டும் இந்தியாவுக்கு வருவேன்.. மெஸ்ஸி நெகிழ்ச்சி

புதுடெல்லி,

கால்பந்து உலகின் சூப்பர் ஸ்டாரும், அர்ஜென்டினா அணியின் கேப்டனுமான லயோனல் மெஸ்சி, ‘கோட் இந்தியா டூர் 2025’ என்ற பெயரில் 14 ஆண்டுக்கு பிறகு மூன்று நாள் சுற்றுப்பயணமாக கடந்த 13-ந்தேதி இந்தியாவுக்கு வந்தார். முதலில் கொல்கத்தாவுக்கு சென்ற அவர் தனது 70 அடி உருவச்சிலையை திறந்து வைத்தார். ஆனால் அங்கு சால்ட்லேக் ஸ்டேடியத்தில் நடந்த பிரமாண்டமான நிகழ்ச்சியில் வெறும் 15 நிமிடங்களில் வெளியேறியதால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் ஸ்டேடியத்தை சூறையாடினர். இதனால் குழப்பம் ஏற்பட்டாலும் அவரது பயணம் தடங்கலின்றி தொடர்ந்தது.

பின்னர் ஐதராபாத், மும்பை சென்ற மெஸ்சி அங்கு நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதைத் தொடர்ந்து மெஸ்சி மும்பையில் இருந்து தனி விமானத்தில் நேற்று பிற்பகல் டெல்லிக்கு சென்றார்.

மெஸ்சியின் வருகையொட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பிரபலங்களுக்கான கண்காட்சி கால்பந்து போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் மினெரவா ஆல் ஸ்டார் அணி 6-0 கோல் கணக்கில் செலிபிரட்டி ஆல்-ஸ்டார் அணியை வீழ்த்தியது. மெஸ்சியை காண மைதானத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டு இருந்தனர். மெஸ்சி நுழைந்ததும் அவரது பெயரை உச்சரித்து ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். இளம் கால்பந்து வீரர்களுடன் சிறிது நேரம் விளையாடிய மெஸ்சி, பின்னர் மைதானத்தில் கரைபுரண்ட உற்சாக வெள்ளத்திற்கு மத்தியில் வலம் வந்தார். மெஸ்சியுடன், இண்டர் மியாமி கிளப் வீரர்கள் ரோட்ரிகா டி பால், லூயிஸ் சுவாரஸ் ஆகியோரும் வந்திருந்தனர். அவர்கள் பந்தை ரசிகர்களை நோக்கி உதைத்து குஷிப்படுத்தினர்.

நிகழ்ச்சியில் டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா, ஐ.சி.சி. தலைவர் ஜெய் ஷா, இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பெய்சுங் பூட்டியா, டெல்லி கிரிக்கெட் சங்க தலைவர் ரோகன் ஜெட்லி ஆகியோரும் கலந்து கொண்டனர். அப்போது மெஸ்சிக்கு இந்திய அணிக்குரிய சீருடை மற்றும் பேட்டை நினைவுப்பரிசாக ஜெய்ஷா வழங்கினார். அத்துடன் டி20 உலகக் கோப்பை போட்டிக்கான டிக்கெட்டும் வழங்கப்பட்டது.

அப்போது ரசிகர்களுக்கு மத்தியில் பேசிய மெஸ்சி, ‘இந்த 3 நாள் இந்திய பயணத்தில் என் மீது அன்பும், ஆதரவும் காட்டிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உண்மையிலேயே இது எங்களுக்கு அழகான அனுபவமாகும். உங்களின் அன்பையும், நேசத்தையும் எங்களுடன் எடுத்து செல்கிறோம். நாங்கள் நிச்சயம் மீண்டும் இந்தியாவுக்கு வருவோம். கால்பந்து போட்டியில் விளையாடவோ அல்லது இது போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவோ மறுபடியும் இந்தியாவுக்கு வருகை தருவோம் என்று நம்புகிறேன்’ என்றார்.

முன்னதாக மெஸ்சி, பிரதமர் மோடியை சந்திப்பதாக இருந்தது. ஆனால் மோசமான வானிலையால் மெஸ்சியின் டெல்லி வருகை தாமதம், அதே நேரத்தில் பிரதமரின் வெளிநாட்டு பயணம் காரணமாக அந்த சந்திப்பு கைவிடப்பட்டது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.