எத்தியோப்பியாவின் கவுரவ விருதை 140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன் – பிரதமர் மோடி

அடிஸ் அபாபா,

பிரதமர் மோடியின் 3 நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவர் எத்தியோப்பியாவுக்கு நேற்று புறப்பட்டு சென்றார். எத்தியோப்பியாவில் பிரதமர் மோடி 2 நாள் அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார். இதன்படி அந்நாட்டுக்கு சென்ற அவரை அந்நாட்டின் பிரதமர் அபி அகமது அலி விமான நிலையத்தில் வரவேற்றார். பின்னர் அவரை தன்னுடன் காரில் அழைத்து சென்றார்.

எத்தியோப்பிய பிரதமர் அபி அகமதுவுடனான சந்திப்பின்போது பேசிய பிரதமர் மோடி, “ஆயிரம் ஆண்டுகளாக இரு நாடுகளும், தகவல் தொடர்பு, பரிமாற்றம் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வந்துள்ளன. நம்முடைய இரு நாடுகளின் ஒத்துழைப்பில், பொருளாதாரம், புதிய கண்டுபிடிப்பு, தொழில் நுட்பம், பாதுகாப்பு, சுகாதாரம், திறன் கட்டமைப்பு மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பு போன்றவற்றின் முக்கிய அம்சங்களில் விரிவாக கலந்து ஆலோசனை மேற்கொள்வதற்கான ஒரு வாய்ப்பை இன்று நாம் பெற்றுள்ளோம். இந்தியாவில், எத்தியோப்பிய மாணவர்களுக்கான உதவி தொகையை இரட்டிப்பாக்க நாங்கள் முடிவு செய்திருக்கிறோம்” என்று கூறினார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, பன்முக தன்மையில் ஒற்றுமைக்கான அடையாளங்களாக, மொழிவளம் மற்றும் பாரம்பரியங்களை கொண்ட இரு நாடுகளும் உள்ளன. அமைதி மற்றும் மனித இன நலனுக்கான செயல்பாட்டில் ஈடுபடும் ஜனநாயக சக்திகளாக இந்தியாவும் எத்தியோப்பியாவும் உள்ளன” என்று பிரதமர் மோடி கூறினார்.

இதனைத்தொடர்ந்து பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. அந்நாட்டின், “தி கிரேட் ஹானர் நிஷான் ஆப் எத்தியோப்பியா” என்ற உயரிய விருது அவருக்கு அளிக்கப்பட்டது. பிரதமருக்கு, எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது இந்த விருது வழங்கி கவுரவித்தார். இந்த விருது பெறும் முதல் உலக தலைவர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார். பிரதமர் மோடிக்கு வெளிநாடுகளில் கிடைக்க பெற்ற 28-வது உயரிய விருது இதுவாகும்.

இந்நிலையில் எத்தியோப்பியா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “இந்த மாபெரும் கட்டிடத்தில்தான் உங்கள் சட்டங்கள் வடிவமைக்கப்படுகின்றன, இங்கே மக்களின் விருப்பம் அரசின் விருப்பமாக மாறுகிறது.

மேலும், அரசின் விருப்பம் மக்களின் விருப்பத்துடன் இணக்கமாக இருக்கும்போது, ​​திட்டங்கள் முன்னோக்கி செல்கிறது. உங்கள் மூலமாக, நான் வயல்களில் உள்ள உங்கள் விவசாயிகளிடமும், புதிய யோசனைகளை உருவாக்கும் தொழில்முனைவோரிடமும், சமூகங்களை வழிநடத்தும் பெண்களிடமும், எதிர்காலத்தை வடிவமைக்கும் எத்தியோப்பிய இளைஞர்களிடமும் பேசுகிறேன்.

நேற்று, ‘எத்தியோப்பியாவின் மாபெரும் கவுரவ விருதை’ பெறுவதில் நானும் பெருமை அடைந்தேன். இதனை 140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன். இந்த விருதை இந்திய மக்கள் சார்பாக, பணிவுடனும் கூப்பிய கரங்களுடனும் நான் ஏற்றுக்கொள்கிறேன்!” என்று கூறினார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.