ஐபிஎல் வரலாற்றில் வயதானவர்களின் அணி (Dad’s Army) என்று கிண்டல் செய்யப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ், 2026-ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்காக தனது பழைய அடையாளத்தை முழுமையாக மாற்றிக்கொண்டுள்ளது. அனுபவமிக்க வீரர்களை நம்பி களமிறங்கும் தோனியின் வழக்கமான ஃபார்முலாவை உடைத்து, இம்முறை இளம் வீரர்களுக்கு, சிவப்பு கம்பளம் விரித்துள்ளது சிஎஸ்கே. அபுதாபியில் நடந்த மினி ஏலத்தில் சிஎஸ்கே எடுத்த முடிவுகள், அணியின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக அமைந்தாலும், சமநிலையை குலைத்துவிட்டதோ என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
Add Zee News as a Preferred Source
From those who built it to those ready to carry it forward
The Legacy continues
Thank you, OG Lions. Forever grateful #WhistlePodu #Yellove pic.twitter.com/J6xibi5y04
— Chennai Super Kings (@ChennaiIPL) December 17, 2025
டிஎன்ஏ மாற்றம்
சிஎஸ்கே அணியில் உள்ள 25 வீரர்களில் 16 பேர் 30 வயதுக்கு உட்பட்டவர்கள். இது சிஎஸ்கே வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம். 20 வயதான உத்தர பிரதேசத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் பிரசாந்த் வீர் மற்றும் 19 வயதான ராஜஸ்தான் விக்கெட் கீப்பர் கார்த்திக் சர்மா ஆகிய இருவரையும் தலா ரூ. 14.2 கோடி கொடுத்து வாங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த காலங்களில் அனுபவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த சிஎஸ்கே, 2025 சீசனில் கடைசி இடத்தை பிடித்த பிறகு இந்த மாற்றத்தை நோக்கி நகர்ந்துள்ளது. குறிப்பாக, ஆயுஷ் மத்ரே, டெவால்ட் பிரேவிஸ் போன்ற இளம் வீரர்களின் கடந்த சீசன் ஆட்டம் நிர்வாகத்தின் சிந்தனையை மாற்றியுள்ளது. சென்னை அணியில் 35 வயதிற்கு மேல் உள்ள ஒரே வீரர் தோனி மட்டுமே. மற்ற அனைவரும் 35 வயதிற்கு கீழ் தான் உள்ளனர்.
மாற்றத்திற்கான காரணம்
நவீன டி20 கிரிக்கெட்டின் வேகம் அதிகரித்துள்ளது. அனுபவமிக்க வீரர்கள் சில நேரங்களில் அதிகப்படியான யோசனைகளால் திணறும் போது, இளம் வீரர்கள் பயமின்றி விளையாடுகிறார்கள் என்று சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் ஒப்புக்கொண்டுள்ளார். “விளையாட்டின் போக்கிற்கு ஏற்ப நாங்கள் மாற தவறிவிட்டோம். இப்போது அந்த மாற்றத்தைச் செய்துள்ளோம்” என்று அவர் கூறியுள்ளார். இந்த மாற்றங்கள் அனைத்தும் தோனிக்கு பிந்தைய காலத்திற்கான தயார்நிலை என்றே பார்க்கப்படுகிறது. 44 வயதாகும் தோனிக்கு இதுவே கடைசி சீசனாக இருக்கலாம் என முன்னாள் சிஎஸ்கே வீரர் ராபின் உத்தப்பா கணித்துள்ளார். சஞ்சு சாம்சனை டிரேட் முறையில் வாங்கியது, கார்த்திக் சர்மா போன்ற இளம் கீப்பர்களை அதிக விலை கொடுத்து எடுத்தது எல்லாமே வருங்கால கேப்டன் மற்றும் கீப்பரை தயார் செய்வதற்கான அடித்தளமே. தற்போது அணியில் தோனியுடன் சேர்த்து 4 விக்கெட் கீப்பர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏலத்தில் சறுக்கிய இடங்கள்
இளம் இரத்தத்தை பாய்ச்சினாலும், ஏலத்தில் சிஎஸ்கே சில அடிப்படை தவறுகளைச் செய்துவிட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது. தோனிக்குத் துணையாக டெத் ஓவர்களில் அதிரடி காட்ட ஒரு அனுபவமிக்க ‘பினிஷர்’ தேவை. ரூ. 2 கோடி அடிப்படை விலையில் டேவிட் மில்லர் போன்ற வீரர்கள் கிடைத்தும், சிஎஸ்கே அவர்களை கண்டுகொள்ளவில்லை. மதீஷா பத்திரனாவை இழந்தது சிஎஸ்கேவிற்குபேரிழப்பு. அவருக்கு மாற்றாக சரியான டெத் பவுலரை எடுக்கவில்லை. மேட் ஹென்றி, கலீல் அஹ்மத், முகேஷ் சவுத்ரி என பெரும்பாலும் பவர் பிளே பந்து வீச்சாளர்களே உள்ளனர். கடைசி ஓவர்களில் யார்க்கர் வீசப்போவது யார் என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.
நீண்ட கால திட்டமிடல் அவசியம் தான். ஆனால், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறும் ஐபிஎல் சுழற்சியில், தற்போதைய வெற்றிக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஜடேஜாவின் இடத்தை பிரசாந்த் வீர் நிரப்புவார் என்ற நம்பிக்கை இருந்தாலும், பந்துவீச்சில் உள்ள ஓட்டைகளை அடைக்கத் தவறியது சிஎஸ்கேவிற்கு பின்னடைவாக அமையலாம். ஏலத்தில் வெற்றிகளை குவிக்கும் சிஎஸ்கே, இம்முறை தனது புதிய பாதையில் செல்லும்போது, அடிப்படை விஷயங்களை கோட்டை விட்டுவிட்டதோ என்பதே கிரிக்கெட் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.
About the Author
RK Spark