புதுச்சேரியில் த.வெ.க-வின் மக்கள் சந்திப்புக் கூட்டம் டிசம்பர் 9-ம் தேதி நடைபெற்றது. உப்பளம் துறைமுக மைதானத்தில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில், `5,000 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்… வெளியூர் நபர்களுக்கு அனுமதி கிடையாது… கியூ-ஆர் கோடுடன் கூடிய பாஸ் இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி…’ என்று புதுச்சேரி காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
த.வெ.க தரப்பும் அதற்கு ஒப்புக்கொள்ள, அன்றைய தினம் விஜய்யும் வந்து சேர்ந்தார். பாஸ் வைத்திருந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி என்று காவல்துறை திரும்ப திரும்ப சொன்னதால், பாஸ் கிடைக்காதவர்கள் நிகழ்ச்சி நடக்கும் மைதானத்திற்கு வரவில்லை.
மற்றொருபுறம், `ஒரு பாஸுக்கு இரண்டு நபர்கள் வரலாம்’ என்று ஒருசில உள்ளூர் த.வெ.க நிர்வாகிகள் பாஸ் விநியோகித்ததை நம்பி அங்கு சென்ற சிலர், காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

அதனால் அங்கு ஏற்பட்ட சலசலப்பை முடிவுக்கு கொண்டுவர நினைத்த புஸ்ஸி ஆனந்த், `பாஸ் இல்லாதவர்களும் உள்ளே வரலாம்’ என்று மைக்கில் தெரிவித்தார். அப்போதுதான் சீனியர் எஸ்.பி ஈஷாசிங் செய்த சம்பவம் அனைவருக்கும் தெரிந்ததுதான்.
அதற்கடுத்து நடந்த சம்பவம்தான் தற்போது வைரலாகி வருகிறது. ஈஷா சிங் மைக்கை பிடுங்கியதும் புஸ்ஸி ஆனந்த் முகம் வெளிறிப் போய் ஸ்தம்பித்து நின்றுவிட, அந்த இடம் பதற்றமானது. அந்த சூழலைப் புரிந்துகொண்ட சட்டம் ஒழுங்குப் பிரிவின் சீனியர் எஸ்.பி கலைவாணன், ஈஷா சிங்கை அமைதிப்படுத்தி அவரிடம் இருந்த மைக்கை வாங்குகிறார்.
அதையடுத்து மைதானத்தை நோக்கி முன்னேறுவதற்கு முண்டியடித்துக் கொண்டிருந்த கூட்டத்தை, `அமைதியா இருங்க…’ என்று மைக்கில் கத்தியவாறு, அங்கு பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த காவலர்களை அலர்ட் செய்கிறார்.
அப்போது, `உள்ளே போதுமான கூட்டம் இல்லை. இங்கும் குறைவான நபர்கள்தான் இருக்கிறார்கள். இவர்களை உள்ளே அனுப்பினால் பிரச்னை இருக்காது’ என்று த.வெ.க தரப்பில் கூறப்பட்டது. தவிர மைதானத்தின் நுழைவு வாயில் திடீரென மூடப்பட்டதால் அங்கு கூட்ட நெரிசல் அதிகமாகி, அசாதாரணமான சூழல் ஏற்பட்டது.
அதை உணர்ந்து கொண்ட சீனியர் எஸ்.பி கலைவாணன், கதவை திறந்து ஒவ்வொருவராக மைதானத்துக்குள் அனுமதித்தார். கதவின் முன்பு நின்றிருந்த சிறு கூட்டம் உள்ளே சென்றதும், கதவை மூடும்படி காவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதன் காரணமாகவே அங்கு அசம்பாவிதங்கள் நிகழாமல் தவிர்க்கப்பட்டன. அதேபோல சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்.பி-யாக கலைவாணன் பொறுப்பேற்றதும், புதுச்சேரியிலுள்ள சமூக வலைத்தள இன்ஃப்ளூயன்சர்களை ஒருங்கிணைத்து ஒரு வாட்ஸ்-அப் குழுவை அமைத்திருக்கிறார்.
காவல்துறை மூலம் வெளியிடப்படும் சுற்றறிக்கை மற்றும் தகவல்களை அவர்கள் மூலம் மக்களிடம் கொண்டு செல்கிறார். அதன்படி, த.வெ.க கூட்டத்திற்கு கியூ-ஆர் கோடு பாஸ் இல்லையென்றால் அனுமதி இல்லை என்ற தகவலை, அவர்கள் மூலம் திரும்ப திரும்ப சொல்ல வைத்தார்.
அதன் காரணமாகவே பாஸ் இல்லாதவர்கள் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திற்கு வரவில்லை. அதன் மூலம் எந்த அசம்பாவிதங்களும் நிகழவில்லை என்பதுதான் ஹைலைட். ஈரோட்டில் நாளை த.வெ.க கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில், தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.