இந்த ஆண்டின் கிருஸ்துமஸ் மற்றும் எதிர்வரும் புத்தாண்டு பிறப்பு ஆகியவற்றை ஒருசேர கொண்டாடும் வகையில் ராமநாதபுரத்தில் மாடல் கேக் உருவாக்கப்பட்டுள்ளது.
மலேசியாவின் பெருமைமிகு அடையாளமான இரட்டை கோபுரங்கள் போன்று செய்யப்பட்டுள்ள இந்த கேக் பலரையும் கவர்ந்து வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் விழாக் காலங்கள் மற்றும் சுதந்திர தினம், குடியரசு தினங்கள், உலக பிரபலங்களின் பிறந்தநாள்கள், உலக கோப்பை விளையாட்டு போட்டிகள் ஆகியவற்றின் போது அதனைக் குறிக்கும் வகையில் பிரமாண்ட மாதிரி கேக் வடிவங்களை உருவாக்கி வாடிக்கையாளர்களைக் கவர்வது ராமநாதபுரம் ஐஸ்வர்யாஸ் பேக்கரிஸின் வழக்கம்.
கடந்த காலங்களில் பாரதியார், ரத்தன் டாடா, இளையராஜா, மரடோனா உருவங்கள் மற்றும் கால்பந்து, கிரிக்கெட்டின் உலகக்கோப்பை ஆகியவற்றின் மாதிரி வடிவிலான கேக்கினை உருவாக்கி காட்சிக்கு வைத்துள்ளனர்.
இந்த ஆண்டு கிருஸ்துமஸ் மற்றும் பிறக்க உள்ள புதிய ஆண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு மலேசிய நாட்டின் பெருமைமிகு அடையாளமான ‘இரட்டை கோபுரங்கள்’ வடிவிலான மாதிரி கேக்கினை இந்நிறுவனத்தினர் காட்சிப்படுத்தியுள்ளனர்.
பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்கள் என்பது மலேசியா கோலாம்பூரில்அமையப் பெற்றுள்ள உலகின் ஐந்தாவது உயரமான கட்டிடமாகும். 20-ஆம் நூற்றாண்டின் மிக உயர்ந்த கட்டிடமாகப் பதிவு பெற்றிருப்பதும் இந்தக் கட்டிடம் ஆகும்.

2003 அக்டோபர் 17-ஆம் தேதி தாய்பேயில் வானுயர கட்டிடம் கட்டி முடிக்கப்படும் வரை, பெட்ரோனாஸ் கோபுரங்கள்தான் உலகின் உயரமான கட்டிடங்களாக இருந்து வந்தன. எனினும், உலகின் மிக உயரமான இரட்டைக் கோபுரங்களாக இன்னமும் இருந்து வருகின்றன. கோலாலம்பூர் மாநகரின் அடையாளச் சின்னமாகவும் இருந்து வருகிறது.
சீசர் பெலி என்னும் கட்டிடக் கலைஞரால் 1998-ஆம் ஆண்டில் வடிவமைக்கப்பட்ட இந்தக் கட்டிடம் முழுவதும் அலுவலகப் பயன்பாட்டுக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் துருப் பிடிக்காத உருக்குகளையும், கண்ணாடிகளையும் பயன்படுத்தி இந்த 88 மாடிக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

பெட்ரோனாஸ் கோபுரம், 1242 அடிகள் உயரத்தில் கட்டிட உச்சியைக் கொண்டு இருந்தாலும், அதன் உச்சியில் அமைந்துள்ள கூரிய அமைப்புகள் 1483 அடி உயரத்தைத் தொடுகின்றன. மலேசியாவின் இஸ்லாமிய பண்பாட்டைப் பிரதிபலிப்பதாகவும், இஸ்லாமிய கலையில் காணப்படும் வடிவ அமைப்பைக் கொண்டதாகவும் இந்தக் கட்டிடம் அமைந்து உள்ளது.
இந்நிலையில் ராமநாதபுரத்திற்கும் மலேசிய நாட்டிற்கும் நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக நிலையான தொடர்பு இருந்து வருகிறது. இத்தகைய வரலாற்று உண்மையைப் பறைசாட்டும் வகையில் மலேசியாவின் இந்த இரட்டை கோபுரம் ( petronas twin Tower) கேக்கினை 50 கிலோ சர்க்கரை மற்றும் 200 முட்டைகளைப் பயன்படுத்தி 7 அடி உயரத்தில் உருவாக்கியுள்ளனர்.
ராமநாதபுரம் பாரதி நகர் ஐஸ்வர்யா பேக்கரி நிறுவனத்தின் முன் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த மாடல் கேக் வாடிக்கையாளர்களையும் பொதுமக்களையும் கவர்ந்துள்ளது.