ரூபாய் 16 கோடி நஷ்டம்! யாருக்கெல்லாம் சம்பளம் குறைந்தது? முழு விவரம்!

ஐபிஎல் 2026 மினி ஏலம் நேற்று அபுதாபியில் உள்ள எத்திஹாத் அரினாவில் மிகப்பிரமாண்டமாக நடந்து முடிந்தது. இந்த ஏலத்தில் பல இளம் வீரர்கள் கோடிகளில் புரண்டாலும், சில முக்கிய நட்சத்திர வீரர்களுக்கு இது ஒரு சோகமான ஏலமாகவே அமைந்தது. கேமரூன் கிரீன், பிரசாந்த் வீர் போன்றோர் மிகப்பெரிய தொகையை பெற்று கொண்டாடி வரும் வேளையில், கடந்த சீசனில் கோடிகளில் சம்பளம் வாங்கிய பல வீரர்கள், இம்முறை மிகக்குறைந்த தொகைக்கே ஏலம் போயுள்ளனர். மொத்தம் 369 வீரர்கள் ஏலப்பட்டியலில் இடம் பெற்றிருந்த நிலையில், 10 அணிகளும் சேர்ந்து வெறும் 77 இடங்களை மட்டுமே நிரப்பின. கடந்த 2025 சீசனில் மோசமான ஆட்டம், அணியின் புதிய வியூகங்கள் மற்றும் வீரர்களின் உடற்தகுதி போன்ற காரணங்களால் பல வீரர்களின் சந்தை மதிப்பு இம்முறை அதிரடியாக குறைந்துள்ளது. அப்படி சம்பளத்தில் பெரும் சரிவைச் சந்தித்த 5 முக்கிய வீரர்களை பற்றி பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

வெங்கடேஷ் ஐயர் (Venkatesh Iyer)

இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் இந்திய ஆல்-ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர். கடந்த 2025 ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இவரை நம்பி ரூ. 23.75 கோடி என்ற இமாலய தொகையை கொடுத்து வாங்கியது. ஆனால், அவர் அந்த நம்பிக்கையை காப்பாற்றத் தவறினார். 7 இன்னிங்ஸ்களில் வெறும் 142 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் கேகேஆர் அணி அவரை விடுவித்தது. ரூ. 2 கோடி அடிப்படை விலையுடன் ஏலத்தில் வந்த அவரை வாங்க அணிகள் முதலில் தயங்கின. இறுதியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரூ. 7 கோடிக்கு அவரை வாங்கியது. இது கடந்த முறையை விட சுமார் 16.75 கோடி ரூபாய் குறைவு.

ஆகாஷ் தீப் (Akash Deep)

இந்திய வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப், லக்னோ அணியால் கடந்த முறை அதிக விலைக்கு வாங்கப்பட்டார். கடந்த சீசனில் 6 போட்டிகளில் விளையாடிய அவர், 12.05 என்ற மிக அதிகமான எக்கனாமியில் ரன்களை வாரி வழங்கி, வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். இதனால் லக்னோ அணி அவரை கழட்டிவிட்டது. இந்த முறை ஏலத்தின் ஆரம்ப சுற்றுகளில் யாரும் அவரை வாங்க முன்வரவில்லை. பின்னர் Accelerated சுற்றில் கொல்கத்தா அணி அவரை அடிப்படை விலையான ரூ. 1 கோடிக்கு வாங்கியது.

ஆன்ரிச் நோர்ட்ஜே (Anrich Nortje)

தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் நோர்ட்ஜே, காயம் காரணமாக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார். காயங்கள் காரணமாக கடந்த சீசனில் கொல்கத்தா அணிக்காக வெறும் 2 போட்டிகளில் மட்டுமே இவரால் விளையாட முடிந்தது. இது அவரது சந்தை மதிப்பை வெகுவாக பாதித்தது. இம்முறை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி அவரை அடிப்படை விலையான ரூ. 2 கோடிக்கு வாங்கியது.

வனிந்து ஹசரங்கா (Wanindu Hasaranga)

இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்காவும் இந்த பட்டியலில் இணைகிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்தபோது எதிர்பார்த்த அளவு விக்கெட்டுகளை வீழ்த்தாததால் விடுவிக்கப்பட்டார். இம்முறை லக்னோ அணி அவரை அடிப்படை விலையான ரூ. 2 கோடிக்கு வாங்கியுள்ளது.

டேவிட் மில்லர் (David Miller)

தென்னாப்பிரிக்காவின் அனுபவ அதிரடி ஆட்டக்காரர் டேவிட் மில்லரும் சம்பள குறைப்பிலிருந்து தப்பவில்லை. கடந்த சீசனில் ரூ. 7.5 கோடிக்கு விளையாடிய இவர், இம்முறை டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் ரூ. 2 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார். வயது மற்றும் ஃபார்ம் காரணமாக இந்த சரிவு ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. ஐபிஎல் ஏலம் என்பது ஒரு சூதாட்டம் போன்றது. ஒரு சீசனில் உச்சத்தில் இருக்கும் வீரர், அடுத்த சீசனில் அதலபாதாளத்திற்கு செல்லலாம் என்பதற்கு வெங்கடேஷ் ஐயர் ஒரு சிறந்த உதாரணம். அணிகள் இப்போது பெயருக்காக பணத்தை செலவழிக்காமல், தற்போதைய ஃபார்ம் மற்றும் அணியின் தேவைக்கேற்பவே செலவு செய்கின்றன என்பது இந்த ஏலத்தின் மூலம் தெளிவாகியுள்ளது.

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.