கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் வென்றவர்கள், `சங்கத்தின் புதிய நிர்வாகிகள் நாங்கள்தான்’ என்கின்றனர்.
அதேநேரம் ‘இந்த தேர்தல் சட்டப்படி செல்லாது’ எனத் தெரிவித்துள்ளார், சங்கத்தின் நிறுவனத் தலைவர் பிரபுதாசன்.
ஆக மொத்தத்தில் சங்கம் இரண்டாக உடைந்துள்ளது.
என்ன பிரச்னை? – உறுப்பினர்கள் சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம்.

”2015ம் ஆண்டு சங்கம் தொடங்கினாங்க. சங்கத்தை உருவாக்கினதுல பிரபுதாசனுக்கு முக்கியமான பங்கு இருந்தது. ஆரம்ப சில வருடங்கள் எந்தப் பிரச்னையுமில்லாம போயிட்டிருந்தது. மீட்டிங்குகள், நிகழ்ச்சிகள், செய்தி வாசிப்பு பயிற்சி என நிறைய விஷயங்களைச் செய்தாங்க..
ஆனா திடீர்னு என்ன காரணம்னு தெரியல, நிர்வாகத்திலிருந்தவங்களுக்கும் உறுப்பினர் சிலருக்கும் பிரச்னை உருவாகி… அப்ப இருந்தே சங்கத்துல களேபரம்தான்.
தனித் தனி கோஷ்டியா செயல்படத் தொடங்கிட்டாங்க. பிரபுதாசன் அணியில் சுஜாதா பாபு பொதுச் செயலாளர் என அறிவிக்கப்பட்டார்.
பதவிக்காலம் முடிஞ்ச பிறகும் தேர்தல் நடத்தாம தலைவர் பொறுப்பில் தொடர்கிறார்னு பிரபுதாசன் மிது ஒரு சாரார் குற்றம் சுமத்தினாங்க.
அவரோ தேர்தலை நடத்துங்கனு முதல்ல சொன்னர். ஆனா பிறகு ஒருகட்டத்துல இந்த தேர்தல் முறைப்படி நடக்கலைனு சொல்லி அதைப் புறக்கணிக்கச் சொன்னார்.
ஆனாலும் தேர்தல் ஞாயிற்றுக் கிழமை நடந்தது. உறுப்பினர்கள் வந்து ஓட்டுப் போட்டாங்க. தலைவராக சண்முகவேலுவும், பொதுச்செயலாளராக கிறிஸ்டோபர் தேவநேசனும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிச்சிருக்காங்க’ என்றார்கள் அவர்கள்.