ஈரோடு மாவட்டம், விஜயமங்கலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் அந்தக் கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொள்ளவுள்ளார்.
இந்நிலையில் தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண் ராஜ் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “திமுக இளைஞரணி கூட்டத்திற்கு என்ன விதிமுறைகளை விதிக்கப்பட்டன? அதுவே தவெக கூட்டங்களைத் தடுக்க முயற்சிக்கிறார்கள்.
இந்த நெருக்கடியை எல்லாம் தாண்டிதான் கூட்டம் நடத்துகிறோம். தவெக தொண்டர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. காவல்துறையினர் தங்களது கடமையைப் பொறுப்புடன் செய்ய வேண்டும்.

திருப்பரங்குன்றம் பிரச்னை தேவையில்லாதது. தமிழ்நாட்டில் அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும் சகோதரத்துவத்துடன் வாழ்கிறார்கள். அனைத்து மதங்களையும் பின்பற்றும் மாநிலத்திற்கு எடுத்துக்காட்டாக தமிழ்நாடு உள்ளது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக, பாஜக ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள். ஆனால் தமிழ்நாடு மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். காவல்துறையினர் நினைத்திருந்தால் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பிரச்னைகளைத் தவிர்த்திருக்க முடியும்.

தவெக தலைவருக்கு மக்களைச் சந்திக்க ஆர்வம் அதிகம். எங்களுக்கு மக்கள் பாதுகாப்புதான் முக்கியம்.
பிரியாணி கடையில் பிரச்னை செய்வது, பெண் காவலர்களிடம் அத்துமீறுவது போன்ற பிரச்னைகள் தவெக கூட்டங்களில் நடைபெறுகிறதா? எங்கள் தலைவரை அருகில் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
அண்ணாமலை கம்முனு இருக்க வேண்டிய இடத்தில், கம்முனு இருந்திருந்தால் இன்று இருக்க வேண்டிய இடத்தில் தொடர்ந்து இருந்திருப்பார்” என்றார்.