ராணுவ வீரர்களுக்கு தலா ரூ.1.60 லட்சம் ஊக்கத்தொகை-அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்,

ஆயுதப் படைகளின் சேவை மற்றும் தியாகத்தைப் போற்றும் வகையில், அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு ‘போர்வீரர் ஈவுத்தொகை’ என்ற சிறப்புப் பணப் பரிசை அறிவிக்கிறேன். 1776-ம் ஆண்டில் நமது தேசம் நிறுவப்பட்டதைக் கவுரவிக்கும் விதமாக இந்த ஈவுத்தொகை வழங்கப்படும். 14.5 லட்சத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக தலா 1,776 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1.60 லட்சம்) வழங்கப்படும்.

இது அவர்களின் சேவை மற்றும் தியாகத்திற்கு ஒரு அங்கீகாரமாக இருக்கும். அந்த காசோலைகள் ஏற்கனவே அனுப்பப்பட்டுவிட்டன. நமது ராணுவ வீரர்களை விட இதற்கு வேறு யாரும் தகுதியானவர்கள் இல்லை. அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நான் 10 மாதங்களில் 8 போர்களை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளேன். ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தலை அழித்துள்ளேன். காசா போரை முடிவுக்குக் கொண்டு வந்து, 3 ஆயிரம் ஆண்டுகளில் முதல் முறையாக மத்திய கிழக்கில் அமைதியைக் கொண்டு வந்துள்ளேன். மேலும், உயிருடனும் இறந்த நிலையிலும் இருந்த பணயக்கைதிகளை மீட்டுள்ளேன்.

நான் அமெரிக்காவின் வலிமையை மீட்டெடுத்துள்ளேன். மற்ற நாடுகள் மீது வரிகள் விதித்ததன் காரணமாக, நாங்கள் நினைத்ததை விட அதிக பணம் சம்பாதித்தோம். ஏற்கனவே நான் அமெரிக்காவிற்குள் சாதனை அளவிலான 18 டிரில்லியன் டாலர் முதலீட்டைப் பெற்றுள்ளேன். இந்த வெற்றியின் பெரும்பகுதி வரி விதிப்பின் மூலம் கிடைத்துள்ளது. நமக்கு எதிராக பல நாடுகள் செயல்பட்டன. அது இனிமேல் நடக்காது. நிறுவனங்களை அமெரிக்காவில் நிறுவினால் வரிகள் இல்லை என்று அறிவித்தேன்.

இதன்மூலம் இதுவரை கண்டிராத அளவில் தொழிற்சாலைகளை கட்டி வருகிறார்கள். 11 மாதங்களுக்கு முன்பு ஜோ பைடன் நிர்வாகத்திடமிருந்து ஆட்சியை ஒரு குழப்பமான சூழ்நிலையில் இருந்து பெற்றேன். அதை நான் சரிசெய்து வருகிறேன். நான் அதிபராக பதவியேற்றதும், சில மாதங்களிலேயே நாங்கள் மோசமான நிலையில் இருந்து சிறந்த நிலைக்குச் சென்றோம். அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம் பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 7 மாதங்களாக, ஒரு சட்டவிரோத குடியேறியும் கூட நமது நாட்டிற்குள் அனுமதிக்கப்படவில்லை. இது ஒரு மிகப்பெரிய சாதனையாகும். இவ்வாறு டிரம்ப் பேசினார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.