’அலைக்கழிக்கும் மா.சு; கண்டுகொள்ளா அதிகாரி!’ – கிளாம்பாக்கத்தில் நள்ளிரவில் போராடிய செவிலியர்கள்

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் 700 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போராடிய செவிலியர்கள்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போராடிய செவிலியர்கள்

தமிழகம் முழுவதும் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் 1500 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் நேற்று சென்னை சிவானந்தம் சாலையில் கூடி ஆர்ப்பாட்டம் செய்திருந்தனர். திமுக அரசு தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதியின்படி தங்களின் பணிகளை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை. நேற்று காலை தொடங்கிய போராட்டம் மாலை 6 மணிக்கும் மேலாக நீடித்தது.

6 மணிக்கு மேல் காவல்துறையினர் செவிலியர்களை குண்டுக்கட்டாக கைது செய்தனர். கைதானவர்களை பேருந்தில் அடைத்து நகருக்கு வெளியே அழைத்துச் சென்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே விடுவித்திருக்கின்றனர். பேருந்து நிலையத்தின் ப்ளாட்பார்மில் கூடிய 700 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் இரவு முழுவதும் அங்கே அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்திருக்கின்றனர். அதிகாலை 4 மணியளவில் காவல்துறையினர் அவர்களை கைது செய்து ஊரப்பாக்கத்திலுள்ள ஒரு தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்திருக்கின்றனர்.

சிவானந்தம் சாலையில் போராடிய செவிலியர்கள்
சிவானந்தம் சாலையில் போராடிய செவிலியர்கள்

சிவானந்தம் சாலையில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் செய்த போது அவர்களின் பிரதிநிதிகளை அழைத்து சுகாதாரத்துறைச் செயலாளர் பி.செந்தில்குமார் பேசியிருக்கிறார். அந்த சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்பதை செவிலியர்களின் பிரதிநிதிகள் சிலரிடம் கேட்டோம். ‘எங்களின் கோரிக்கை என்னவென்றே தெரியாததைப் போல, ‘எதுக்காக போராடுறீங்க..’னுதான் பேச்சையே ஆரம்பித்தார். பின், ‘நீங்க போராடுனாலும் போராடாட்டியும் இந்த அரசுக்கு செவிலியர்களுக்கு அக்கறை இருக்கு’ என்றார். அப்படியெனில், ‘எங்களை பணி நிரந்தரம் செய்யுங்கள். முதற்கட்டமாக எத்தனை பேரை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பிருக்கிறது’ என்றோம். அதற்கு, ‘அப்படி கற்பனையாலாம் என்னால சொல்ல முடியாது’ என்றார். முழுமையாக எங்களின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்பதற்கு முன்பாகவே, ‘எனக்கு வேற மீட்டிங் இருக்கு’னு சொல்லி கிளம்பிவிட்டார்’ என்றனர்.

இதுதொடர்பாக போராடும் செவிலியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சுபினிடம் பேசினேன். ‘மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் தேர்வு நடத்தியே எங்களை பணியில் அமர்த்தினார்கள். இரண்டு ஆண்டுகளில் எங்களுக்கு நிரந்தரப் பணி கொடுக்க வேண்டும் என்பதே ஒப்பந்தம். ஆனால், இப்போது வரைக்கும் எங்களின் பணி நிரந்தரமாகவில்லை. முதலில் 7700 ரூபாய் சம்பளத்துக்கு வேலை செய்து கொண்டிருந்தோம்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் செவிலியர்கள்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் செவிலியர்கள்

போராடி போராடி இப்போதுதான் 18000 சம்பளம் வரைக்கும் வந்திருக்கிறோம். தேர்தலுக்கு முன்பாக எங்களின் பணிகள் நிரந்தரப்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்திருந்தார். ஆனால், இப்போது வரைக்கும் எங்களை போராட்டத்திலேயே வைத்திருக்கிறார். அமைச்சர் மா.சு வையும் பல முறை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துவிட்டோம். அவர் எங்களை தலைமைச் செயலகத்துக்கு அழைத்துக் கூட பேசவில்லை. அவர் வீட்டில் அதிகாலையில் கைலியோடு வருவார். மனு கொடுக்க நிற்போரின் வரிசையில் நின்றுதான் அவரையும் சந்தித்திருக்கிறோம். ‘இது நிதி சார்ந்த விவகாரம், நான் முடிவெடுக்க முடியாது’ என எங்களின் வலியை உணராமல் மேலோட்டமாக பேசி கடந்து விடுகிறார். அதனால்தான் சிவானந்தம் சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். ஆனால், காவல்துறையினர் எங்களை வலுக்கட்டாயமாக பலவந்தமாக கைது செய்தனர். ஒரு பேருந்தில் 150 பேரை அடைத்து ஏற்றி மூச்சுத்திணற வைத்தனர்.

கைதாகும் செவிலியர்கள்
கைதாகும் செவிலியர்கள்

மயக்கமடைந்த இரண்டு பெண்களை சைதாப்பேட்டை மருத்துவமனையிலும் சேர்த்தோம். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே எங்களை அப்படி அப்படியே விட்டு விட்டார்கள். நாங்கள் ஒன்றாக கூடி பேருந்து நிலையத்திலேயே அமர்ந்துவிட்டோம். அதிகாலையில் எங்களை கைது செய்து ஒரு தனியார் மண்டபத்தில் அடைத்திருக்கின்றனர்’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.