"கிறிஸ்தவ கொள்கைகளுக்கும் திமுக கொள்கைளுக்கு வேறுபாடு கிடையாது" – உதயநிதி ஸ்டாலின்

பெந்தெகோஸ்தே சபைகளின் மாமன்றம் சார்பில் மதுரையில் நடந்த கிறிஸ்து பிறப்பு விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கி உரையாற்றிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “கிறிஸ்தவ கொள்கைகளுக்கும் திமுக கொள்கைகளுக்கும் பெரிய வேறுபாடு கிடையாது. இரண்டுமே மனித நேயம், சமத்துவத்தை மக்களிட போதிக்க வேண்டும் என்பவை.

ஒருவரின் பிறந்தநாள் உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் மகிழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது என்றால் அது இயேசு கிறிஸ்து பிறந்த கிறிஸ்துமஸ்தான்.

கிறிஸ்துமஸ் விழாவில் உதயநிதி

இயேசுவின் வாழ்க்கை எளிமையானது. மக்களுக்கான தலைவர்கள் எப்போதும் அரண்மனையில்தான் இருப்பார்கள் என்கிற கருத்தை உடைப்பதற்காக மாட்டுக்கொட்டகையில் பிறந்தார். சாதாரண மனிதரும் மக்கள் தலைவராக முடியும் என்பதை நிரூபித்து காட்டியவர். அவரைப்போல மக்களோடு மக்களாக வாழ்ந்தவர்கள் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் ஆவார்கள்.

பிறர் மீது இரக்கம் காட்டுங்கள் என்று கிறிஸ்துவம் சொல்கிறது, அதைத்தான் திமுக பின்பற்றுகிறது. பல்வேறு நலத்திட்டங்களை, நன்மைகளை சிறுபான்மை மக்களுக்கு செய்துள்ளது திமுக அரசு. சிறுபான்மை மக்களுக்கு எப்போதும் திமுக உறுதுணையாக இருக்கும். அவர்களும் எங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். சகோதரத்துவம் சமத்துவம் மதசார்பின்மையே நம் அடையாளம்.

நலத்திட்ட உதவி

மக்களே தக்க பாடம் புகட்டுவார்கள்

வெறுப்பு பேச்சு, பிளவுபடுத்தும் பிரசாரங்களை புறம் தள்ளி நாம் ஒரே அணியில் இணைய வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு எதிரான அணியினருக்கு, கூட்டங்களுக்கு எதிராக நாம் ஒன்றிணைய வேண்டும்.

ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு மீது பயம் உள்ளது, எங்கே மக்கள் ஒன்றாகிவிடுவார்கள் நம்மை எதிர்த்துவிடுவார்கள் என்ற பயம் உள்ளது. ஒன்றிய அரசின், பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் எடுபடாது. சாதியால் மதத்தால் பிரித்தாள நினைக்கிறார்கள். அது நடக்காது, தமிழகம் தனித்துவமான மாநிலம். மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியால் கலவரத்தை ஏற்படுத்தி குளிர்காய முயன்றால் மக்களே தக்க பாடம் புகட்டுவார்கள்.

கிறிஸ்துவத்தில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம், பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்பது. எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் ஆட்சி நடத்துகிறார் நம் முதல்வர். ஆனால், பிரித்துக்கொடுப்பது என்றாலே ஒன்றிய அரசுக்கு பிடிக்கவில்லை, நாம் அதிகமான வரியை வழங்கியும் ஒன்றிய அரசு நிதியை பிரித்து கொடுக்காத நிலையிலும் எல்லா தேவைகளையும் நிறைவேற்றி வருகிறார் முதல்வர்.

கிறிஸ்துமஸ் திருவிழாவை மட்டும் கொண்டாடாமல் இயேசுவின் கருத்துக்களையும் நாம் கொண்டாட வேண்டும். சாதாரணமானவர்கள் உழைத்தால் உயரலாம் என்பதை நிரூபித்தது திராவிட இயக்கம்.

உதயநிதி ஸ்டாலின்

உயர்ந்த கொள்கையான இரக்கத்தை போதிப்பது கிறிஸ்தவம். அதையே தான் திராவிடமும் கூறுகிறது. ஆனால் தமிழ்நாடு மீது ஒன்றிய அரசுக்கு இரக்கம் இல்லை. கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் என் மீது தனிப் பாசம், அன்பு வைத்துள்ளனர்.

தமிழர் என்ற உணர்வோடு கிறிஸ்துவர், முஸ்லீம் என அனைவரும் பொங்கல் விழாவை கொண்டாடுகிறோம். இதுதான் தமிழகம். சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி, மதச்சார்பின்மை நம் அடையாளம். பாசிஸ்ட்டுகளின் வெறுப்பு பிரசாரத்தை தாண்டி தமிழ்நாட்டையும் மக்களையும் காப்போம். திமுகவிற்கும் சிறுபான்மை மக்களுக்கான பந்தத்தை பிரிக்க முடியாது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.