கரூர் அருகே உள்ள புகலூர் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்காக செயல்பட்டு வரும் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புகலூர் நகர்மன்ற உறுப்பினர் இந்துமதி தலைமையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி செய்தியாளர்களிடம் பேசும்போது,
“கரூர் அருகே உள்ள புகலூர் நகராட்சி வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மிகவும் குறைவாக உள்ளது. குறிப்பாக, அங்கு இரண்டு மருத்துவர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர். வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க வேண்டும் ,மருத்துவ உபகரணங்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம்.

தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையை நேரில் ஆய்வு செய்து பார்வையிட வேண்டும். அங்கு தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, பொதுமக்களின் அசவுகரியத்தை போக்க வேண்டும் என்ன மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம். வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தேவையான படுக்கை வசதிகள் இல்லாத இந்த அரசு மருத்துவமனை, ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் போல செயல்பட்டு வருகிறது. கரூர் மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத் துறை இயக்குனரகமும் விரைந்து கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுக்கும்.
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் இடதுசாரி கட்சிகள் கோரிக்கையை ஏற்று 100 நாள் வேலை திட்டம் காங்கிரஸ் கட்சியால் கொண்டுவரப்பட்டது. குறிப்பாக, மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் தேசிய தலைவர் முயற்சியால், கிராமப்புற ஏழை எளிய மக்கள் பட்டினியால் துன்பப்படக்கூடாது, பட்டினி சாவுகள் தடுக்கப்பட வேண்டும் என்பதற்காக ஒரு உத்தரவாத வேலைவாய்ப்பு திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்திற்கு பின்னர் மகாத்மா காந்தியின் பெயர் சூட்டப்பட்டது. காங்கிரஸ் ஆட்சிக்கு பின்னர் கடந்த 2014 -ம் ஆண்டு மத்தியில் ஆட்சி அமைத்த பா.ஜ.க அரசு தொடர்ந்து இத்திட்டத்திற்கான ஒதுக்கீட்டுத் தொகையை குறைத்து வந்தது.

தற்போது, இந்த திட்டத்தின் பெயரை மாற்றி அமைத்து மாநில அரசு 40 சதவீத நீதி பங்களிப்பை ஏற்க வேண்டும் என திருத்தம் செய்துள்ளது. மத்தியில் எந்த ஆட்சி வந்தாலும் இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தும் வகையில் சட்டமாக வடிவமைக்கப்பட்டது. 100 நாள் வேலை திட்டம் கிராமப்புற ஏழைகளின் வேலைவாய்ப்பு உரிமை, உயிர்நாடியை எடுக்கும் வகையில் ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதில், அரசு அதிகாரிகள் விரும்பினால் தான் வேலை வாய்ப்பு வழங்க முடியும் என்ற திருத்தம் ஏழை மக்களுக்கு எதிரானது. 100 நாள் வேலை திட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு இருப்பது முழுமையாக திட்டத்தை சிதைக்கும் சதியாக பா.ஜ.க அரசு மேற்கொண்டுள்ளது. இதற்காக, வரும் 23-ம் தேதி நாடு முழுவதும் இடதுசாரி இயக்கங்கள் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துகின்றோம். ஒரு நாள் வேலைத் திட்டத்தில் வேலைவாய்ப்பு பெற்ற அனைத்து மக்களையும் ஒன்று திரட்டி போராட்டத்தை நடத்த திட்டமிட்டு உள்ளோம்” என்றார்.