ஸ்ரீநிவாசன் மறைவு: `தனிப்பட்ட வகையில் இழப்பை ஏற்படுத்தியுள்ளது'- கேரள முதல்வர் பினராயி விஜயன்

மலையாள சினிமாவின் பிரபல நடிகர் ஸ்ரீநிவாசன் (69) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை மரணமடைந்தார். எர்ணாகுளம் மாவட்டம், உதயம்பேரூரில் உள்ள வீட்டில் தங்கியிருந்த அவர் உடல் உபாதைகளுக்காக சிகிச்சை பெற்றுவந்தார். டயாலிசிஸ்-க்காக அழைத்துச் சென்ற சமயத்தில் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து, திருப்பூணித்துறை அரசு தாலுகா மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்த நிலையில் மரணமடைந்தார். அவரின் உடல் கொச்சியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இறுதிச்சடங்கு நாளை (டிச.21) காலை 10 மணிக்கு அரசு மரியாதையுடன் எர்ணாகுளத்தில் நடைபெற உள்ளது. நடிகர் ஸ்ரீநிவாசன் மறைவுக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், நடிகர் மோகன்லால் உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஸ்ரீநிவாசன் உடலுக்கு முதல்வர் பினராயி விஜயன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

அஞ்சலி செலுத்திய பினராயி விஜயன்

மேலும் கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில்:

“நடிகர் ஸ்ரீநிவாசனின் மரணம் மலையாள சினிமாவால் மீள முடியாத துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. சாதாரண மனிதர்களின் வாழ்க்கையை வெள்ளித்திரையில் கொண்டு சேர்த்ததிலும், சிரிப்பின் மூலமும், சிந்தனையின் மூலமும் ரசிகர்கள் மத்தியில் விழிப்புணர்வை கொண்டுசேர்ப்பதில் இவரைப் போன்று நடிகர்கள் அதிகமாக இல்லை.

நடிகர் ஸ்ரீநிவாசன்

சினிமாவின் பல வழக்கங்களையும் தகர்த்துக்கொண்டு சினிமாவில் முன்னேறினார். கதை, திரைக்கதை, இயக்கம் உள்ளிட்ட அனைத்திலும் தனித்துவம் படைத்தவர். அவருடைய பல சினிமாக்கள் மலையாளிகளின் மனதில் அனைத்து காலங்களிலும் நிலைநிற்கும். என்னைப் பொறுத்தவரை நடிகர் ஸ்ரீநிவாசனின் மறைவு தனிப்பட்ட வகையில் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நேர்காணலுக்காக நாங்கள் இணைந்தது இன்றும் மனதில் இனிமையான நினைவாக உள்ளது. அன்புக்கும், அரவணைப்புக்குமான பிரதிபலிப்புதான் ஸ்ரீநிவாசன்” என முதல்வர் பினராயி விஜயனின் இரங்கல் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.