அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் 2026 டி20 உலக கோப்பை தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், இந்திய டி20 அணியின் கேப்டனான சூர்யகுமார் யாதவின் ஃபார்ம் தலைவலியாக மாறியுள்ளது. ரோஹித் சர்மா தலைமையில் 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு, டி20 வடிவில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த அவர், கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக ரன்கள் வராமல் தவிக்கிறார். சூர்யகுமார் யாதவ் கடந்த ஆண்டில் டி20 சர்வதேசங்களில் ஒரு அரைசதமும் அடிக்காமல் வருடத்தை முடித்துள்ளார். 2025ல் 19 இன்னிங்ஸில் அவர் எடுத்த மொத்த ரன்கள் 218 மட்டும் தான். (சராசரி 13.62, ஸ்ட்ரைக் ரேட் 123.16). அக்டோபர் 2024ல் வங்கதேசத்துக்கு எதிராக 75 ரன்கள் அடித்த பிறகே, டி20யில் அவரிடம் இருந்து மீண்டும் ஒரு 50 கூட வரவில்லை.
Add Zee News as a Preferred Source

கேப்டன்சி வெற்றி
தென் ஆப்ரிக்கா தொடரில் இந்தியா 3-1 என தொடரை கைப்பற்றினாலும், சூர்யகுமார் தனிப்பட்ட முறையில் 4 இன்னிங்ஸில் 34 ரன்கள் மட்டுமே எடுத்தார் (சராசரி 8.50, ஸ்ட்ரைக் ரேட் 103.03). கேப்டனாக இருந்தாலும், பேட்டராக அவரது பங்கு நிரப்பப்படாமல் இருப்பதே கவலைக்குரிய அம்சமாக பார்க்கப்படுகிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான அடுத்த டி20 தொடரை முன் வைத்து, “என்ன தவறு நடக்கிறது எனக்கு தெரியும்; அந்த குறைகளை சரி செய்து உலக கோப்பைக்கு முன் மீண்டும் சிறந்த நிலைக்கு வருவேன்” என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு உலக கோப்பைக்கு முன் மீதமுள்ள டி20 போட்டிகள் 5 உள்ளன. அவை அனைத்தும் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடராகும்.
இந்த ஐந்து போட்டிகளுமே சூர்யகுமார் யாதவுக்கான கடைசி சோதனை. எனவே இந்த தொடரில் குறைந்தது இரண்டு முதல் மூன்று பெரிய இன்னிங்ஸ்கள் அவர் ஆடியே ஆக வேண்டும். சூர்யாவின் பேட்டிங் ஃபார்மின்மையை விட அவரது கேப்டன்சி பதிவு மிகவும் வலுவானதாக இருப்பதே, அவரை பதவியில் வைத்திருக்கும் முக்கிய காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. டி20 கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு, இந்தியா ஒரு தொடரை கூட இழக்காத சாதனையை உருவாக்கியிருக்கிறார்.
நம்பிக்கையா, அவசரமா?
சூர்யகுமார் யாதவ் “திரும்ப வந்து காட்டுவேன், அனைத்தையும் சரி செய்வேன்” என்று திறமையாக பேசிக்கொண்டிருக்கும் நிலையில், நியூசிலாந்து தொடரே அந்த வார்த்தைகளுக்கு ஆதாரம் தர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த தொடரில் அவர் மீண்டும் 360–டிகிரியில் ரன்கள் குவித்தால், உலக கோப்பைக்கு முன் இந்திய dressing roomல் உள்ள அனைத்து சந்தேக குரல்களையும் அமைதிபடுத்தலாம். இல்லையெனில், உலக கோப்பைக்கு பின் கேப்டன்சி மாற்றம் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறும் என்று பல செய்திகளும் கசிந்து வருகின்றன.
டி20 உலக கோப்பைக்கு பிறகு என்ன நடக்கும்?
சமீபத்தில் டி20 உலக கோப்பைக்காண இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் யாருமே எதிர்பார்க்காத விதமாக துணை கேப்டன் சுப்மன் கில் அணியிலிருந்து நீக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் நியூசிலாந்து தொடரில் சூரியகுமார் யாதவ் ரன்கள் அடித்தாலும், அடிக்காவிட்டாலும் டி20 உலக கோப்பையில் கேப்டனாக இருக்கப் போவது அவரே. இந்த உலக கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்றால் சூரிய குமாரின் இடம் இந்திய அணியில் நிலைத்திருக்கும். ஒருவேளை தோல்வியடையும் பட்சத்தில் அவரின் கேப்டன்சி மட்டும் இல்லாமல், ஒரு வீரராகவும் அவரது இடம் கேள்விக்குறியாகும். ஒருவேளை இந்திய அணி வெற்றி பெற்றாலும் சூரியகுமார் யாதவ் கேப்டனாக தொடர வாய்ப்பு இருக்காது என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
About the Author
RK Spark