திடீர் ஓய்வை அறிவித்த முன்னாள் சிஎஸ்கே ஆல்ரவுண்டர்! ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டின் மிக சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவராக திகழ்ந்த கர்நாடகாவை சேர்ந்த கிருஷ்ணப்ப கவுதம், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் தனது ஓய்வை அறிவித்துள்ளார். கடந்த 14 ஆண்டுகளாக ரஞ்சி டிராபி, ஐபிஎல் மற்றும் இந்திய அணி என பல தளங்களில் முத்திரை பதித்த இவரது பயணம் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. 2012ம் ஆண்டு கர்நாடக அணிக்காக ரஞ்சி டிராபியில் அறிமுகமானார் கவுதம். உத்தர பிரதேசத்திற்கு எதிரான தனது முதல் போட்டியிலேயே சுரேஷ் ரெய்னா மற்றும் புவனேஷ்வர் குமார் போன்ற ஜாம்பவான்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஆரம்பம் முதலே தனது சுழற்பந்து வீச்சு மற்றும் அதிரடி பேட்டிங் மூலம் கர்நாடக அணியின் தவிர்க்க முடியாத வீரராக மாறினார்.

Add Zee News as a Preferred Source

 RETIREMENT 

Karnataka’s K Gowtham has announced his retirement from cricket pic.twitter.com/BgWPtxwf7Q

— Cricbuzz (@cricbuzz) December 22, 2025

 ரஞ்சி டிராபி நாயகன்

2016-17 ரஞ்சி சீசன் கவுதமின் கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அந்த சீசனில் வெறும் 8 போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இது அவரை ஒரு முழுமையான ஆல்-ரவுண்டராக அடையாளம் காட்டியது. அடுத்த ஆண்டே அசாம் அணிக்கு எதிராக மைசூருவில் நடைபெற்ற போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்து, பேட்டிங்கிலும் தான் சளைத்தவர் அல்ல என்பதை நிரூபித்தார். தனது உள்நாட்டு கிரிக்கெட் வாழ்க்கையில் 59 முதல் தர போட்டிகள் மற்றும் 68 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடி 320க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அத்துடன் பின்வரிசையில் களமிறங்கி அணிக்கு தேவையான நேரங்களில் முக்கியமான ரன்களை சேர்த்து கொடுத்ததும் இவரது சிறப்பம்சமாகும். 2023 வரை கர்நாடக அணியின் முக்கிய தூணாக விளங்கியவர் இவர்.

இந்திய அணியில் வாய்ப்பு

உள்நாட்டு போட்டிகளில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் பலனாக, இந்தியா ஏ அணிக்காக விளையாடும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. நியூசிலாந்து ஏ, வெஸ்ட் இண்டீஸ் ஏ, ஆஸ்திரேலியா ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் போன்ற அணிகளுக்கு எதிராக விளையாடி தனது திறமையை நிரூபித்தார். 2021ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார். கொழும்பில் நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமாகி, அந்த போட்டியில் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார். இதுவே இவரது ஒரே சர்வதேச போட்டியாக அமைந்தது.

ஐபிஎல் பயணம்

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் என பல முக்கிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். 2021ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவரை ரூ.9.25 கோடிக்கு வாங்கியது. இது அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய அங்கீகாரமாக கருதப்படுகிறது. 9 சீசன்களில் விளையாடியுள்ள இவர், ஐபிஎல் மூலம் மட்டும் ரூ.35 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டியுள்ளார். 2019ம் ஆண்டு கர்நாடகா பிரீமியர் லீக் தொடரில் பெல்லாரி டஸ்கர்ஸ் அணிக்காக விளையாடியபோது இவர் நிகழ்த்திய சாதனை கிரிக்கெட் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். அந்த போட்டியில் 56 பந்துகளில் 134 ரன்களை குவித்தார். அதில் 13 சிக்ஸர்கள் அடங்கும். வெறும் 39 பந்துகளில் சதமடித்தார். ஒரு திறமையான சுழற்பந்து வீச்சாளராகவும், அதிரடி பேட்ஸ்மேனாகவும் இந்திய கிரிக்கெட்டில் வலம் வந்த கிருஷ்ணப்ப கவுதம், தனது ஓய்வு அறிவிப்பின் மூலம் ஒரு நீண்ட பயணத்தை நிறைவு செய்துள்ளார். கர்நாடக கிரிக்கெட்டிற்கும், ஐபிஎல் தொடருக்கும் இவர் ஆற்றிய பங்களிப்பு ரசிகர்களால் என்றும் நினைவுகூரப்படும்.

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.