மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தை மத்திய பாஜக அரசு, வளர்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்பு (விபி -ஜி ராம் ஜி) சட்ட மசோதாவாக மாற்றி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றிய நிலையில் அதற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்கினார்.
இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது முதலே காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” புதிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தால் 125 நாட்கள் வேலை கிடைக்கப் போகிறதா? அதைப் பாராட்ட எங்களுக்கு மனமில்லையா?
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் முடக்கப்பட்டுள்ளதை எதிர்த்துக் குரல் கொடுக்கத் துணிவின்றி, மீண்டும் மீண்டும் பச்சைப் பொய்யை அவிழ்த்துவிடுகிறார் பழனிசாமி.
ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை என்பது சட்டமாக இருந்தபோதே அதை நிறைவேற்றாமல், சம்பளமும் வழங்காமல் அலைக்கழித்த பா.ஜ.க. அரசு இப்போது 1008 நிபந்தனைகளுடன் நிறைவேற்றும் புதிய திட்டத்தில் 125 நாட்கள் வேலை தரப்போகிறதா? உண்மையைச் சொன்னால், ஒருநாள் வேலைக்குக் கூட இனி ஒன்றிய அரசு உத்தரவாதம் கொடுக்காமல் கடமையைக் கைகழுவியுள்ளது.
மகாத்மா காந்தி பெயரை நீக்கக்கூடாது என்று உங்கள் ஓனருக்கு வலிக்காமல் அழுத்தம் கொடுத்தீர்களே… என்ன ஆனது? உங்களை ஒரு பொருட்டாகவே டெல்லி மதிக்கவில்லையே.

மாநில அரசின் மீது 40% நிதிச்சுமையை ஏற்றும் எதேச்சாதிகாரமும் கைவிடப்படவில்லையே? டெல்லியை எதிர்த்துக் கேள்வி கேட்கும் துணிவு உங்களுக்கு இருக்குமென்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் முட்டுகளையாவது தவிர்க்கலாம்.
வறுமையை ஒழித்து, மக்களின் மாண்பை உயர்த்திய UPA அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் பா.ஜ.க. அரசால் குழிதோண்டி புதைக்கப்படுவதற்கு வக்காலத்து வாங்கி, உங்களது அரசியல் வாழ்க்கையின் முடிவுரையை நீங்களே எழுதிக் கொள்கிறீர்கள் என்பதை மட்டும் நினைவூட்டுகிறேன்” என்று எடப்பாடி பழனிசாமியை விமர்சித்திருக்கிறார்.