சமீபத்தில் நடந்த ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் ஆஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் ரூ. 25.20 கோடி என்ற இமாலய தொகைக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வாங்கப்பட்டார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான மோதலில் இறுதியில் கிரீனை கைப்பற்றியது கொல்கத்தா. ஆனால், பிசிசிஐயின் புதிய விதிமுறைகள் மற்றும் வரி பிடித்தங்கள் காரணமாக, அவரது கையில் கிடைக்கப்போகும் தொகை இதில் பாதிக்கும் குறைவாகவே இருக்கும் என்று சில கணக்குகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
Add Zee News as a Preferred Source

பிசிசிஐயின் புதிய சம்பள வரம்பு
இந்த ஆண்டு பிசிசிஐ வெளிநாட்டு வீரர்களுக்கான சம்பளத்தில் ஒரு முக்கிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது என்று கூறப்படுகிறது. மினி ஏலத்தில் ஒரு வெளிநாட்டு வீரர் எவ்வளவு அதிக தொகைக்கு ஏலம் போனாலும், அவருக்கு வழங்கப்படும் அதிகபட்ச ஊதியம் ரூ. 18 கோடியாக மட்டுமே இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மெகா ஏலத்தில் ஒரு வீரர் பெற்ற அதிகபட்சத் தொகை அல்லது அணியின் அதிகபட்ச தக்கவைப்பு தொகை ஆகிய இரண்டில் எது குறைவோ, அதுவே வெளிநாட்டு வீரரின் சம்பள உச்சவரம்பாக கருதப்படும். அதன்படி, கேமரூன் கிரீன் ரூ. 25.20 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டிருந்தாலும், புதிய விதிகளின்படி அவரது அதிகாரப்பூர்வ ஐபிஎல் சம்பளம் ரூ. 18 கோடி மட்டுமே. மீதமுள்ள ரூ. 7.20 கோடி பிசிசிஐயின் வீரர்கள் நல நிதிக்கு மாற்றப்படும்.
வரி பிடித்தங்கள்
இந்த ரூ. 18 கோடியும் கிரீனுக்கு முழுமையாக கிடைத்துவிடாது. இதில் பல்வேறு வரி பிடித்தங்கள் உள்ளன.
இந்திய வருமான வரி: வெளிநாட்டு வீரர்களுக்கு 20% TDS விதிக்கப்படும். ரூ. 18 கோடியில் 20% என்பது ரூ. 3.6 கோடி. இது போக, சர்சார்ஜ் மற்றும் செஸ் வரிகளும் உண்டு. இதையும் சேர்த்தால் வரி தொகை சுமார் ரூ. 4.5 கோடியை தாண்டும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் பங்கு: பொதுவாக வெளிநாட்டு கிரிக்கெட் வாரியங்கள் தங்கள் வீரர்கள் ஐபிஎல் மூலம் ஈட்டும் வருவாயில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை எடுத்துக்கொள்ளும்.
ஆஸ்திரேலியாவில் வரி: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தம் இருந்தாலும், ஆஸ்திரேலியாவில் உள்ள வரி விதிகளுக்கு உட்பட்டு அவர் கூடுதல் வரி செலுத்த வேண்டியிருக்கலாம்.

இறுதியாக கையில் கிடைப்பது எவ்வளவு?
மேற்கூறிய அனைத்து பிடித்தங்களையும் கழித்த பிறகு, கேமரூன் கிரீனுக்குச் சுமார் ரூ. 9.75 கோடி முதல் ரூ. 10 கோடி வரை மட்டுமே கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஏலத்தில் ரூ. 25 கோடி என்று அறிவிக்கப்பட்டாலும், கையில் கிடைப்பது 10 கோடிக்கும் குறைவு என்பது வீரர்களுக்கு ஒரு ஏமாற்றமாகவே இருக்கலாம். ஆனால், பிசிசிஐ இந்த விதியை கொண்டு வந்ததற்கு காரணம், மினி ஏலங்களில் வெளிநாட்டு வீரர்களுக்கு கொடுக்கப்படும் நியாயமற்ற அதிகப்படியான விலையை கட்டுப்படுத்தவும், ஏல சந்தையில் ஒரு சமநிலையை பேணவுமே ஆகும். கேமரூன் கிரீனை பொறுத்தவரை, ரூ. 25.20 கோடி என்பது ஒரு கவுரவமான விலைப்பட்டியல் மட்டுமே; ஆனால் அவரது உண்மையான வருமானம் பிசிசிஐ விதிகளால் சுருங்கிவிட்டது என்பதே நிதர்சனம்.
About the Author
RK Spark