IPL 2026-க்கு முன் அர்ஜூன் டெண்டுல்கருக்கு நேர்ந்த பின்னடைவு: தவிப்பில் லக்னோ அணி!

Arjun Tendulkar : ஐபிஎல் 2026 சீசன் தொடங்குவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரின் ஃபார்ம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. விஜய் ஹசாரே கோப்பைத் தொடரில் அவர் வெளிப்படுத்திய மோசமான ஆட்டம், கிரிக்கெட் வட்டாரத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது.

Add Zee News as a Preferred Source

தொடர் வெற்றியில் கோவா – அதிரடி காட்டிய லலித் யாதவ்

2025-26 விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜெய்ப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற லீக் போட்டியில் கோவா மற்றும் இமாச்சலப் பிரதேச அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கோவா அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் குவித்தது. அந்த அணியின் நட்சத்திர வீரர் லலித் யாதவ் அபாரமாக விளையாடி 104 ரன்கள் எடுத்து சதம் விளாசினார். அவருக்கு உறுதுணையாக ஆடிய கேப்டன் தீப்ராஜ் கான்ய்கர் 71 ரன்கள் சேர்த்தார். இமாச்சலப் பிரதேசம் தரப்பில் ரோஹித் குமார் 5 விக்கெட்டுகளைக் வீழ்த்தி அசத்தினார்.

அர்ஜுன் டெண்டுல்கர்: பந்துவீச்சில் சொதப்பல்

இந்த சீசனில் கோவா அணிக்காக விளையாடி வரும் அர்ஜுன் டெண்டுல்கர் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இந்தப் போட்டியில் அவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சோபிக்கவில்லை. 

பேட்டிங் ஏமாற்றம்: சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் தொடக்க வீரராகக் களமிறங்கி ஓரளவு ரன் சேர்த்த அர்ஜுன், ஒருநாள் போட்டியான இதில் மிகக் கீழ் வரிசையில் இறக்கப்பட்டார். ஒரே ஒரு பந்தை மட்டுமே சந்தித்த அவர், ரன் ஏதும் எடுக்க வாய்ப்பு கிடைக்காமல் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பந்துவீச்சில் அடிவாங்கிய அர்ஜுன்: பந்துவீச்சில் அர்ஜுன் டெண்டுல்கர் ரன்களை வாரி வழங்கினார். 6 ஓவர்கள் வீசிய அவர் 58 ரன்களை விட்டுக்கொடுத்தார். ஒரு விக்கெட் கூட அவரால் வீழ்த்த முடியவில்லை. அவரது எகானமி ரேட் 9.70 ஆக இருந்ததால், அதிருப்தி அடைந்த கேப்டன் அவருக்கு மேற்கொண்டு ஓவர்கள் வழங்கவில்லை. 10 ஓவர்கள் வீச வேண்டிய அர்ஜுன், பாதியிலேயே நிறுத்தப்பட்டது அவருக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

த்ரில் வெற்றி பெற்ற கோவா

286 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இமாச்சலப் பிரதேச அணி, கடைசி வரை போராடியது. அந்த அணியின் பி. ராஜ்மேன் அதிரடியாக விளையாடி 126 ரன்கள் குவித்தார். இருப்பினும், மற்ற வீரர்கள் சொதப்பியதால் இமாச்சலப் பிரதேசம் 49.3 ஓவர்களில் 277 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் கோவா 8 ரன்கள் வித்தியாசத்தில் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது. கோவா கேப்டன் தீப்ராஜ் பேட்டிங்கில் மட்டுமல்லாமல் பந்துவீச்சிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார்.

ஐபிஎல் 2026: லக்னோ அணியில் அர்ஜுன் டெண்டுல்கர்

கடந்த பல சீசன்களாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த அர்ஜுன் டெண்டுல்கர், ஐபிஎல் 2026 மெகா ஏலத்திற்கு முன்னதாக வர்த்தக ஒப்பந்தம் (Trade) மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணிக்கு மாற்றப்பட்டுள்ளார். லக்னோ அணி அவரைத் தக்கவைத்துள்ள நிலையில், அவர் ரன்களை வாரி வழங்குவது அந்த அணி நிர்வாகத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

IPL 2026 எப்போது தொடக்கம்?

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் 2026 குறித்த லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, 19-வது ஐபிஎல் சீசன் வரும் மார்ச் 26, 2026 அன்று தொடங்கும் என உத்தேசமாகத் தெரிகிறது. இந்தத் தொடரின் விறுவிறுப்பான இறுதிப் போட்டி மே 31, 2026 அன்று நடைபெற வாய்ப்புள்ளது.

வழக்கம் போல 10 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில், போட்டிகளின் எண்ணிக்கையை 74-லிருந்து 84 ஆக உயர்த்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் போட்டிகள் அனைத்தும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும், ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும். மார்ச் கடைசி வாரத்தில் தொடங்கும் இந்த கிரிக்கெட் திருவிழா, கோடை காலம் முழுவதும் ரசிகர்களை உற்சாகப்படுத்த தயாராகி வருகிறது.

 

About the Author


Karthikeyan Sekar

Karthikeyan Sekar

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.