இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் ஒரு பெரிய மாற்றத்தை செய்ய தேர்வு குழு தயாராகி வருகிறது. நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில், நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம், உள்ளூர் போட்டிகளில் ருத்ர தாண்டவம் ஆடிவரும் இஷான் கிஷனுக்கு மீண்டும் அணியில் இடம் கிடைக்கவுள்ளது. 2025-26 சீசனின் கடைசி உள்நாட்டு தொடராக, நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடர் வரும் ஜனவரி 11 முதல் 18 வரை நடைபெறுகிறது. இதற்கான இந்திய அணியை பிசிசிஐ இந்த வார இறுதியில் அறிவிக்க உள்ளது.
Add Zee News as a Preferred Source

ரிஷப் பந்த்
இந்நிலையில், அணியின் சமநிலை மற்றும் வீரர்களின் சமீபத்திய ஃபார்ம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, ரிஷப் பண்டை அணியிலிருந்து கழட்டிவிட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. கடைசியாக 2024 ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு எதிராக ஒருநாள் போட்டியில் விளையாடிய ரிஷப் பண்ட், அதன் பிறகு ஒருநாள் போட்டிகளில் சோபிக்க தவறினார். சமீபத்தில் முடிந்த தென்னாப்பிரிக்க தொடருக்கான அணியில் அவர் இடம் பெற்றிருந்தாலும், ஆடும் லெவனில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. தற்போது அவர் டெல்லிக்காக விஜய் ஹசாரே கோப்பையில் விளையாடி வருகிறார். அங்கும் அவரது ஆட்டம் (5 மற்றும் 70 ரன்கள்) பெரிதாக ஈர்க்கவில்லை என்பதால், அவரை தற்காலிகமாக ஓரம் கட்ட தேர்வுக்குழு திட்டமிட்டுள்ளது.
மீண்டும் என்ட்ரி கொடுக்கும் இஷான் கிஷன்
ரிஷப் பண்ட் வெளியேறும் பட்சத்தில், அந்த இடத்தை நிரப்ப போகிறவர் ஜார்க்கண்ட் அணியின் அதிரடி மன்னன் இஷான் கிஷன். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒருநாள் அணியில் இடம்பெறாத அவர், தற்போது உள்ளூர் கிரிக்கெட்டில் வெளுத்து வாங்கி வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றதோடு, ஜார்க்கண்ட் அணி முதல் முறையாக கோப்பையை வெல்ல முக்கிய காரணமாகவும் அமைந்தார். இறுதி போட்டியில் அவர் அடித்த சதம் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தது.
அதுமட்டுமின்றி, விஜய் ஹசாரே ஒருநாள் தொடரிலும் அந்த ஃபார்மை தக்கவைத்துள்ளார். டிசம்பர் 24 அன்று கர்நாடகாவுக்கு எதிராக வெறும் 33 பந்துகளில் சதம் விளாசி, லிஸ்ட்-ஏ கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த இரண்டாவது இந்தியர் என்ற சாதனையை படைத்தார். இந்த அசுரத்தனமான ஆட்டம் அவருக்கு மீண்டும் இந்திய அணியின் கதவைத் திறந்துவிட்டுள்ளது.

கேப்டன்சி யாருக்கு?
தென்னாப்பிரிக்க தொடரில் கழுத்து வலி காரணமாக விலகியிருந்த ஷுப்மன் கில், தற்போது முழுமையாக குணமடைந்துள்ளார். இதனால் நியூசிலாந்து தொடரில் அவரே இந்திய அணியை வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கில் இல்லாத நேரத்தில் கே.எல். ராகுல் தலைமையில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் காயத்திலிருந்து மீண்டு பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியை தொடங்கியிருந்தாலும், அவருக்கு இன்னும் முழுமையான மருத்துவ சான்றிதழ் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
About the Author
RK Spark