இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் பயிற்சியாளர் பதவியில் கவுதம் கம்பீர் நீடிப்பது குறித்து பிசிசிஐ வட்டாரத்தில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சொந்த மண் டெஸ்ட் தொடரில் இந்தியா சந்தித்த படுதோல்விக்கு பிறகு, கம்பீரின் தலைமை பண்பு குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதன் எதிரொலியாக, தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருக்கும் விவிஎஸ் லக்ஷ்மணுக்கு பிசிசிஐ மீண்டும் தூது விட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Add Zee News as a Preferred Source
கம்பீர் மீதான அதிருப்தி ஏன்?
கடந்த 12 மாதங்களில் இந்திய அணி சொந்த மண்ணில் இரண்டு முறை ஒயிட்வாஷ் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த இரண்டு தோல்விகளும் கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக இருந்தபோதே நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, சமீபத்தில் முடிவடைந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா 0-2 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது பிசிசிஐ நிர்வாகிகளை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்தியா தற்போது ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இன்னும் 9 டெஸ்ட் போட்டிகள் மீதமுள்ள நிலையில், இதே நிலை நீடித்தால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவது கனவாகிவிடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

தற்காத்து கொள்ளும் கம்பீர்
தனது பதவி குறித்த விமர்சனங்கள் எழுந்தபோதெல்லாம், கம்பீர் தனது ஒயிட் பால் சாதனைகளையே சுட்டிக்காட்டி வருகிறார். “நான் சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஆசிய கோப்பை போன்ற தொடர்களை வென்று கொடுத்தவன்” என்று அவர் கூறினாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அணியின் தொடர் தோல்விகள் அவருக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளன. இந்த சூழலில்தான் பிசிசிஐ நிர்வாகம், முன்னாள் ஜாம்பவான் விவிஎஸ் லக்ஷ்மணனை டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மட்டும் தலைமை பயிற்சியாளராகப் பொறுப்பேற்க முடியுமா என்று முறையில் அணுகியதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ராகுல் டிராவிட் பதவிக்காலம் முடிவடைந்தபோதும், பிசிசிஐ லக்ஷ்மணனை அணுகியது. ஆனால், அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக பணியாற்றுவதிலேயே விருப்பம் தெரிவித்திருந்தார். இப்போதும் அவர் அதே காரணத்தை கூறி, டெஸ்ட் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
அடுத்தது என்ன?
கம்பீருக்கு 2027 உலகக்கோப்பை வரை ஒப்பந்தம் இருந்தாலும், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே அவரது செயல்பாடு திருப்திகரமாக இருப்பதாக பிசிசிஐ கருதுகிறது. இதனால், எதிர்காலத்தில் ‘ஸ்பிளிட் கோச்சிங்’ எனப்படும் வெவ்வேறு ஃபார்மேட்டுகளுக்கு வெவ்வேறு பயிற்சியாளர்கள் என்ற முறையை பிசிசிஐ அமல்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “கம்பீருக்கு பிசிசிஐ-யின் உயர்மட்ட அதிகார மையங்களில் நல்ல ஆதரவு உள்ளது. வரவிருக்கும் டி20 உலகக்கோப்பையில் இந்தியா கோப்பையை வென்றாலோ அல்லது இறுதிப்போட்டிக்கு சென்றாலோ அவரது பதவிக்கு ஆபத்து இருக்காது. ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை ஒரு கேள்விக்குறி நீடிக்கிறது,” என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

விவிஎஸ் லக்ஷ்மண் டெஸ்ட் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க மறுத்துவிட்டதால், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு வேறு சரியான மாற்று தேர்வுகள் இல்லை என்பதே கம்பீருக்கு சாதகமான விஷயமாக உள்ளது. இருப்பினும், அடுத்து வரும் டெஸ்ட் தொடர்களில் இந்திய அணியின் செயல்பாடு மேம்படவில்லை என்றால், பிசிசிஐ கடுமையான முடிவுகளை எடுக்க தயங்காது என்றே தெரிகிறது. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி மீண்டும் வெற்றி பாதைக்குத் திரும்புமா அல்லது பயிற்சியாளர் மாற்றத்தில் சிக்குமா என்பதை வரும் காலங்கள்தான் பதில் சொல்லும்.
About the Author
RK Spark