முஸ்தாபிசுர் ரஹ்மானுக்கு கொலை மிரட்டல்? KKR அணிக்கு சிக்கல்

mustafizur rahman : ஐபிஎல் 2026 ஏலம் அண்மையில் முடிந்த நிலையில், பத்து அணிகளும் பிளேயர்களுக்கான கேம்ப் குறித்த அப்டேட்டுகளை அனுப்பிக் கொண்டிருக்கின்றன. எந்த தேதிக்குள் பிளேயர்கள் அணியுடன் இணைய வேண்டும், எங்கெங்கு கேம்ப் நடக்கும் என தெரிவித்துக் கொண்டிருக்கும் சூழலில், கேகேஆர் அணிக்கு இப்போது புதிய சிக்கல் வந்துள்ளது. மினி ஏலத்தில் 9.20 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட முஸ்தாபிசூர் ரஹ்மான் இந்தியாவில் ஐபிஎல் விளையாடுவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதுடன், அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், அவர் வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

Add Zee News as a Preferred Source

ரூ. 9.20 கோடிக்கு ஏலம் எடுத்த KKR

கடந்த டிசம்பர் 16 ஆம் தேதியன்று அபுதாபியில் நடைபெற்ற ஐபிஎல் 2026 ஏலத்தில், முஸ்தாபிசுர் ரஹ்மானை வாங்குவதற்கு டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி அவரை ரூ. 9.20 கோடி என்ற பெரும் தொகைக்கு ஏலம் எடுத்தது. ஐபிஎல் வரலாற்றில் ஒரு வங்கதேச வீரருக்கு வழங்கப்பட்ட மிக உயர்ந்த தொகை இதுவாகும்.

உஜ்ஜயினி மதத் தலைவர்கள் மிரட்டல்

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக அண்மையில் நடந்த தாக்குதல்களைக் கண்டித்து, இந்தியாவில் பரவலான போராட்டங்கள் வெடித்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, உஜ்ஜயினியைச் சேர்ந்த ரின்முக்தேஸ்வர் மகாதேவ் கோயிலின் தலைமைப் பூசாரி மகாவீர் நாத் உள்ளிட்ட சில மதத் தலைவர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். முஸ்தாபிசுர் ரஹ்மான் ஐபிஎல் போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்பட்டால், மைதானங்களுக்குள் புகுந்து ஆடுகளங்களை சேதப்படுத்துவோம் என்று அவர்கள் மிரட்டியுள்ளனர். வங்கதேசத்தில் நடக்கும் வன்முறைகளுக்கு எதிராக இந்திய அதிகாரிகளும் பிசிசிஐயும் மௌனம் காப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சமூக வலைதளங்களில் எதிர்ப்பு

முஸ்தாபிசுரை ஏலம் எடுத்ததற்காக KKR அணி நிர்வாகத்திற்கு எதிராக சமூக வலைதளங்களில் ‘Boycott KKR’ போன்ற ஹேஷ்டேக்குகள் பரவி வருகின்றன. வங்கதேசத்துடனான விளையாட்டு உறவுகளைத் துண்டிக்க வேண்டும் என்று பல ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

முஸ்தாபிசூர் வருவதில் சிக்கல்

மிரட்டல்கள் ஒருபுறம் இருக்க, அவரது வருகையில் மற்றுமொரு சிக்கலும் உள்ளது. 2026 ஏப்ரல் மாதத்தில் வங்கதேசம் – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் நடைபெற உள்ளன.  இதற்காக வங்கதேச கிரிக்கெட் வாரியம் (BCB) அவருக்கு முழுமையான அனுமதி (NOC) வழங்கவில்லை. இதனால் ஐபிஎல் தொடரின் இடையில் சுமார் 8 நாட்கள் அவர் நாடு திரும்ப வேண்டிய சூழல் ஏற்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

KKR-ன் அடுத்த பிளான்

பாதுகாப்பு காரணங்கள் அல்லது பிசிசிஐ-ன் முடிவுகளால் முஸ்தாபிசுர் விளையாட முடியாமல் போனால், அவருக்கு மாற்றாக அல்சாரி ஜோசப் (Alzarri Joseph), ஸ்பென்சர் ஜான்சன் (Spencer Johnson) அல்லது ஜெய் ரிச்சர்ட்சன் (Jhye Richardson) போன்ற வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்களை KKR அணி பரிசீலிக்க வாய்ப்புள்ளது. தற்போது வரை பிசிசிஐ (BCCI) அல்லது கொல்கத்தா அணி நிர்வாகம் முஸ்தாபிசுர் ரஹ்மானின் பங்கேற்பு குறித்து எந்த அதிகாரப்பூர்வ மாற்றத்தையும் அறிவிக்கவில்லை. இருப்பினும், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் எல்லை தாண்டிய பதற்றங்கள் காரணமாக ஐபிஎல் 2026 தொடரில் முஸ்தாபிசுரின் பங்கேற்பு பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது.

About the Author


Karthikeyan Sekar

Karthikeyan Sekar

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.