“எங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றினோமா? 'இவர்கள்' பறைசாற்றுவார்கள்" – மகளிர் மாநாட்டில் கனிமொழி

திருப்பூர், காரணப்பேட்டையில் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்கிற பெயரில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடந்தது.

இந்த மாநாட்டில் மக்களவை எம்.பி கனிமொழி பேசியதாவது…

“இந்த மேடையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இந்திய அரசியலமைப்பு சாசனத்தைப் பரிசளித்தோம்.

காரணம், இந்த மேடையில் முதலமைச்சருக்கு தமிழ்நாட்டை அல்ல… இந்த நாட்டை ஒப்படைத்திருக்கிறோம்.

கனிமொழி
கனிமொழி

நம்முடைய அரசியலமைப்பு சட்டம் தரக்கூடிய செய்தி – நீதி, சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம். இதை காப்பாற்றக்கூடிய ஒரே முதலமைச்சர் ஸ்டாலின் தான். இந்த நம்பிக்கையை நான் மட்டும் அல்ல… இந்த நாடே வைத்திருக்கிறது. அதனால்தான், இதை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள் என்று இந்தப் பரிசைக் கொடுத்திருக்கோம்.

பாசிசத்திற்கு எதிராக எழும் குரல் எல்லாம் உங்களுக்கு பின்னால் எழும் குரல்களாக இருந்து வருகின்றது. அதனால்தான், இந்த நாடு உங்களை நம்பியிருக்கிறது என்று நான் திரும்பத் திரும்பக் கூறுகிறேன்.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை தமிழ்நாடு முழுவதும் இருக்கும் 1.30 கோடி சகோதரிகளுக்குச் சென்று கொண்டிருக்கிறது.

‘தேர்தல் நேரத்தில் வாக்குறுதி கொடுத்தீர்களே… நிறைவேற்றுனீர்களா?’ என்று நம்மை பார்த்து சிலர் கேட்கிறார்கள். நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம் என்பதை இந்த 1.30 கோடி சகோதரிகள் பறைசாற்றுவார்கள்.

அடுத்தது, கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டம். வேலைக்கு 47 சதவிகிதம் செல்லக்கூடிய பெண்கள் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு. வேறெந்த மாநிலத்திலும் அதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை.

கனிமொழி
கனிமொழி

இந்தியாவில் பெண்கள் உயர் கல்விக்குச் செல்லும் சதவிகிதம் 28. ஆனால், தமிழ்நாட்டின் சதவிகிதம் 48.

கிராம மக்களுக்கு கிடைக்கக்கூடிய அடிப்படை சம்பளத்தை, பொருளாதார பாதுகாப்பைத் தரும் 100 நாள் திட்டத்தைப் பாதிக்கும் வகையில் பாஜக நடந்து வருகிறது. இதற்கு எதிராக தமிழ்நாட்டில் யாரும் பேசவில்லை.

மதக் கலவரம், காழ்ப்புணர்ச்சியைத் தூண்டி வெற்றி பெறலாம் என்று நினைக்கும் பாஜக-விற்கு சம்மட்டி அடியாக நிற்கிறார், நமது முதலமைச்சர் ஸ்டாலின்.”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.