புதுடெல்லி,
டெல்லியில் நேற்று முன்தினம் காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் நடந்தது. அப்போது அதில் கலந்து கொண்ட கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய்சிங், பிரதமர் மோடியின் பழைய புகைப்படத்தைப் பகிர்ந்ததுடன் மூத்த தலைவர்களின் காலடியில் அமர்ந்த ஒரு அடிமட்டத் தொண்டர் எப்படி முதல்-மந்திரியாகவும், பிரதமராகவும் உயர்ந்தார் என்று கூறி, ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜனதாவின் அமைப்பு பலத்தைப் பாராட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்.
மேலும் ஆளும் பா.ஜனதாவுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெறவும், அவர்களை அதிகாரத்திலிருந்து அகற்றவும் காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை அடிமட்ட அளவில் வலுப்படுத்தும் பிரச்சினையையும் அவர் எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில், கட்சியின் தலைமை அலுவலகமான டெல்லி இந்திரா பவன் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் 140-வது நிறுவன நாள் நிகழ்வில், திக்விஜய் சிங் மற்றும் சசி தரூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்கு பின்னர், திக்விஜய் சிங்கின் பேச்சு தொடர்பாக திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யான சசிதரூரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில், ‘‘மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறியது போல் காங்கிரஸ் கட்சி கட்டமைப்பை அடிமட்ட அளவில் நிச்சயம் வலுப்படுத்தப்பட வேண்டும் என்பதில் சந்தேகமில்லை” என்றார்.