‘என்னிடம் பத்து லட்சம் ஏமாற்றியதுடன் எனக்குச் சொந்தமான விலையுயர்ந்த காரையும் பறித்துக் கொண்டு மோசடி செய்து விட்டார்’
பல ஹிட் சீரியல்களில் வில்லியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ராணி மற்றும் அவரது கணவர் மீது இப்படியொரு புகாரைக் கொடுத்திருக்கிறார் கரூரைச் சேர்ந்த தொழிலதிபர் தினேஷ் என்பவர்.
இவர் கொடுத்த புகாரின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்கிறது காவல் துறை.
முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் விவகாரத்தின் சுருக்கம் இதுதான்.
தினேஷ் என்பவர் கரூரில் ஒரு ஹோட்டல் நடத்தி வந்திருக்கிறார். ஹோட்டலில் நஷ்டம் உண்டாக தனக்குத் தெரிந்த அரசியல்வாதியான ஜான் பாண்டியனைத் தொடர்பு கொண்டு, ஹோட்டலை யாருக்காவது குத்தகைக்கு விடுவது குறித்துப் பேசியிருக்கிறார்.

ஜான் பாண்டியன் சென்னையில் வசிக்கும் பாலாஜியை தினேஷுக்கு அறிமுகப் படுத்தி விட்டிருக்கிறார். பாலாஜி நடிகை ராணியின் கணவர். பாலாஜி கரூரில் உள்ள தன்னுடைய நண்பர் ஒருவரிடம் பேச அந்த நண்பர் ஹோட்டலை குத்தகைக்கு எடுத்திருக்கின்றார்.
அப்போது அந்த நண்பர் பத்து லட்சம் ரூபாயை பாலாஜியிடமே தந்ததாகவும், ஆனால் பாலாஜி பணத்தை தினேஷிடம் தராமல் தான் எடுத்துக் கொண்டு சென்று விட்டதாகவும் புகாரில் கூறியிருக்கிறார் தினேஷ்.
பணத்தை எடுத்துச் சென்ற போது தன்னுடைய விலையுர்ந்த காரையும் கூடவே எடுத்துச் சென்றுவிட்டதாகக் கூறுகிறார் தினேஷ்.
பிறகு பாலாஜியைச் சந்தித்து தன்னுடைய பணத்தைக் கேட்டபோது, தினேஷுக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம் பாலாஜி. ‘என்னை யாராலும் ஒண்ணும் செய்ய முடியாது, உன்னால் முடிஞ்சதைப் பார்த்துக்கோ’ என்றும் விரட்டி விட்டாராம்.
தினேஷ் ஜான் பாண்டியனிடம் முறையிட, அவருமே ‘சட்டப்படி நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள்’எனச் சொல்லி விட்டாராம்.
இந்த விவகாரத்தில் தற்போது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விட்டதால் ராணி, அவரது கணவர் பாலாஜி ஆகியோர் தலைமறைவு ஆகி விட்டதாகக் கூறப்படுகிறது.
ராணியிடம் இது தொடர்பாகப் பேச தொடர்பு கொண்டோம். ஆனால் அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை. அவர் பேசுகிறபட்சத்தில் அவரது விளக்கத்தை பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.