சமையலை ஓவர்டேக் செய்த பர்சனல்!
மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் எவ்வளவு பேசப்படுமோ அதை விட அதிகமாக இந்தாண்டு பேசுபொருளானது, அவரது பர்சனல் விவகாரம்.
ரங்கராஜிடம் ஆடை வடிவமைப்பாளராக இருந்தவர் ஜாய் கிறிசில்டா. இவர் திடீரென ஒரு நாள் ரங்கராஜுடன் மணக்கோலத்திலிருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு தங்களுக்குத் திருமணமாகிவிட்டதாக அறிவித்தார்.
அத்துடன் ரங்கராஜின் குழந்தை தன் வயிற்றில் வளர்வதாகவும் குறிப்பிட்டார். ரங்கராஜ் ஏற்கனவே ஸ்ருதி என்பவரை மணம் முடித்து இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் இந்தத் தகவல் மீடியாக்களின் பரபரப்புச் செய்தி ஆனது.

இவரது இந்த அறிவிப்புக்கு அடுத்த சில தினங்களில் ரங்கராஜ் ஜாய் உடனான தொடர்பைத் துண்டித்துக்கொள்ள விவகாரம் பரஸ்பர அறிக்கைகள், போலீஸ் புகார், மகளிர் ஆணையத் தலையீடு என விவகாரம் விஸ்வரூபமெடுத்தது. மகளிர் ஆணையம் ரங்கராஜ் மீது தவறு இருப்பதாகக் கூறியது.
தொடர்ந்து சில மாதங்களில் குழந்தையைப் பெற்றெடுத்த ஜாய், ரங்கராஜை டி.என்.ஏ. டெஸ்டுக்கு அழைத்தார். தற்போது விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது.

கை மாறிய பிக்பாஸ் வீடு!
சென்னை பூந்தமல்லியில் இயங்கி வந்த ‘ஈவிபி’ பொழுதுபோக்கு பூங்காவில் அடுத்தடுத்து சில விபத்துகள் நடக்க, அதை மூட உத்தரவிட்டது அரசு.
தொடர்ந்து அது தொடர்பாக வழக்குகள் நடந்து வந்த நிலையில், பொழுதுபோக்கு பூங்காவுக்குப் பதில் அந்த இடத்தை சீரியல், சினிமா ஷூட்டிங்கிற்கு வாடகைக்கு விட்டனர், அதன் உரிமையாளர்கள்.
முக்கிய சேனல்களில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களின் ஷூட்டிங் இன்றும் இங்கு நடந்து வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென இங்குதான் வீடு செட் அப் அமைக்கப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு பூங்காவாக இருந்தபோது இடத்தின் உரிமையாளர்களாக இருந்தவர்கள் ஈ.வி. பெருமாள் சாமி மற்றும் சந்தோஷ்.
சில மாதங்களுக்கு முன் இவர்கள் இந்த இடத்தை திரைப்பட தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் குழுமத்திற்கு விற்பனை செய்தனர்.
இடத்தை வாங்கிய வேல்ஸ் குழுமம், வளாகத்தின் பெயரை வேல்ஸ் ஃபிலிம் சிட்டி என மாற்றி, புதுப் பொலிவு பெற்ற சில தினங்களுக்கு முன் திறந்தது.