சல்லியர்கள்: "வேறு மாநிலத்தின் மண் சார்ந்த படத்தைப் புறக்கணித்தால் என்னவாகும்?" – சுரேஷ் காமாட்சி

இயக்குநர் கிட்டு இயக்கத்தில், நடிகர் கருணாஸ், சத்யதேவி, மகேந்திரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் சல்லியர்கள். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படத்துக்கு கென் ஈஸ்வர் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடந்தது.

அப்போது ஊடகங்களிடம் பேசிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, “சல்லியர்கள் திரைப்படம் எடுத்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒவ்வொரு முறையும் தேதி குறிப்பிட்டு வெளியீடு தள்ளிப்போடப்பட்டது. அதற்குக் காரணம் தியேட்டர் கிடைக்கவில்லை என்பதுதான்.

இறுதியாக இந்த வாரம் எந்தப் பெரிய திரைப்படமும் இல்லை என்பதால் வெளியிடலாம் என முடிவு செய்து தியேட்டர் கேட்டோம்.

சல்லியர்கள்
சல்லியர்கள்

ஆனால் தமிழ்நாடு முழுவதும் எங்களுக்கு வெறும் 27 ஷோவுக்கான தியேட்டர் மட்டும்தான் கொடுத்தார்கள். குறிப்பாக பிவிஆர் தியேட்டர் ஒன்றுகூட கொடுக்கவில்லை. சிறிய படத்துக்கு அவ்வளவுதான் கொடுக்க முடியும் எனச் சொல்கிறார்கள். வடநாட்டு நிறுவனமான பிவிஆர் இங்கு வந்து தொழில் செய்கிறது. ஆனால், ஈழத் தமிழர்கள் குறித்த இந்த மண்ணின் கதையைப் புறக்கணிக்கிறது.

இப்படி வேறு மாநிலத்தின் மண்சார்ந்த படத்தைப் புறக்கணித்தால் என்னவாகும்? நம்முடைய பெருந்தன்மையை முட்டாள்தனம் எனக் கருதுகிறார்கள். தியேட்டர் கிடைக்காத காரணத்தால் இந்தப் படத்தை ஓடிடியில் வெளியிட முடிவு செய்துவிட்டோம்.

இந்தப் படம் எடுக்கும்போதே வியாபார ரீதியாக எங்களுக்குக் கைகொடுக்காது என எனக்குத் தெரியும். ஆனால், இந்தப் படம் தனிப்பட்ட முறையில் என்னை ஈர்த்ததால்தான் எடுத்தேன்.

இங்கு தயாரிப்பாளர் சங்கம் என ஒன்று உள்ளது. இதுவரை அந்தச் சங்கம் என்ன கிழித்தது? என்ன கிழிக்கப்போகிறது? இதுவரை அந்தச் சங்கம் செய்தது என்ன என்பதற்கு எந்தப் பதிலும் இல்லை.

ஒரு படத்துக்கு தியேட்டர் கூட வாங்க முடியாத நிலைதான் தயாரிப்பாளர்களுக்கு இருக்கிறது. ரகளபுரம் என்ற படத்தில் கருணாஸ் நடித்திருந்தார். 2013-ல் அந்தப் படம் வெளியானது. அந்தப் படத்தின் விநியோகஸ்கர் ஒருவர் கோயம்புத்தூரிலிருந்து அழைத்து, கருணாஸ் எனக்கு ரூ.1 லட்சம் பணக் கொடுக்க வேண்டிய பாக்கி இருக்கிறது எனப் பேசினார்.

சுரேஷ் காமாட்சி
சுரேஷ் காமாட்சி

மூன்று மாதத்துக்கு முன்பே படம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட பிறகு, கடைசி நேரத்தில் பிரச்னை செய்வதற்குக் காரணம் என்ன? இத்தனைக்கும் கருணாஸ் அந்தப் பணத்தை அந்த நபரிடம் கொடுத்துவிட்டதற்கான ஆதாரத்தையும் வைத்திருக்கிறார். இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்.

சிறிய படங்களுக்கு தியேட்டர் கொடுக்காவிட்டால் எப்படி புதுமுகங்கள் திரையுலகுக்குக் கிடைப்பார்கள்? எந்த அடிப்படையில் தியேட்டர் கொடுக்கிறீர்கள்? இது எல்லாவற்றுக்கும் தயாரிப்பாளர் சங்கம் பதில் சொல்லியே ஆகவேண்டும். பிவிஆர் உள்ளிட்ட ஒட்டுமொத்த திரையரங்க உரிமையாளர்களுக்கும் என்னுடைய வன்மையான கண்டனங்கள்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.