"ஜீ தமிழின் பதிலைப் பொறுத்தே அடுத்த மூவ்" – தமிழ் நடிகர்களுக்கு வாய்ப்புக் கோரும் டிவி நடிகர் சங்கம்

தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் தமிழகத்தைச் சேர்ந்த நடிகர், நடிகைகளுக்கு அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டி ஜீ தமிழ் சேனலுக்குக் கடிதம் தந்துள்ளது சின்னத்திரை நடிகர் சங்கம்.

கடந்த சில மாதங்களுக்கு முன் சங்கத்துக்கு நடந்த தேர்தலில் 100 சதவிகித வெற்றி பெற்று பொறுப்புக்கு வந்த பரத் தலைமையிலான அணி தேர்தலின்போதே இது தொடர்பான ஒரு வாக்குறுதியைத் தந்திருந்தது.

தற்போது ஜீ தமிழ் சேனலுக்குச் சங்கத்தின் சார்பில் கடிதம் ஒன்றை அனுப்பி, இது தொடர்பாகப் பேச நேரம் கேட்டிருக்கிறார்களாம்.

சங்கத் தலைவர் பரத்திடம் பேசினோம்.

பரத்
பரத்

”தமிழ் சீரீயல்களை நம்பி ஆயிரக்கணக்கான ஆர்ட்டிஸ்டுகள் இங்க இருக்காங்க. ஒவ்வொரு சேனலையும் எடுத்துகிட்டா தினமும் காலை 9 மணிக்குத் தொடங்கி இரவு 11 மணி வரை எவ்வளவு சீரியல்கள் ஒளிபரப்பாகுதுங்கிறது எல்லாருக்கும் தெரியும்.

ஆனாலும் இன்னைக்கு தேதியில ஒளிபரப்பாகுற முக்கிய சீரியல்களை எடுத்துப் பாருங்க, ஹீரோ ஹீரோயின் எல்லாருமே கேரளா, கர்நாடகான்னு பக்கத்து மாநிலங்களைச் சேர்ந்தவங்களாகவே இருக்காங்க.

இங்க ஹீரோ ஹீரோயினா நடிக்க ஆளுங்களே இல்லையா? கேட்டா, சீரியல் தயாரிப்பு பெரிய பிசினஸ், அதுல யாரை நடிக்க வைக்கணும்னு எங்களுக்குத் தெரியும்னு சொல்வாங்க.

நாங்க என்ன சொல்றோம்னா, ஹீரோ, ஹீரோயின் கூட நீங்க வெளியில இருந்து கூட்டி வந்துக்கோங்க, அவங்களைத் தவிர சீரியல்ல மத்த கேரக்டர்கள் இருப்பாங்களே, அந்தக் கேரக்டர்களையாச்சும் இங்க இருக்கிறவங்களுக்குக் கொடுங்கனுதான்.

Zee television
Zee television

கர்நாடகாவுல எல்லாம் மத்த மாநிலங்கள்ல இருந்து குறைந்த எண்ணிக்கையில வேணும்னா மத்த மாநிலங்கள்ல இருந்து ஆர்ட்டிஸ்ட் கமிட் செய்ய அனுமதிக்கறாங்க. அப்படி நடிக்கிறவங்களும் கன்னட மொழியைக் கண்டிப்பா கத்துக்கணும்.

இங்க அந்த மாதிரி எந்தக் கட்டுப்பாடும் இல்லாததால்தான், தமிழ் சீரியல் நடிகர் நடிகைகள் வாய்ப்பு இல்லாம கஷ்டப் படுறாங்க” என்றவரிடம்,

ஜீ தமிழை மட்டும் குறி வைத்து கேட்பது ஏன் எனவும் கேட்டோம்.

“சன், விஜய் டிவிக்கள்ல ஜீ தமிழ்ல இருக்கிற அளவக்கு அதிகமான ஆர்ட்டிஸ்டுகள் கிடையாது.

ஜீ தமிழ் சேனலில் இன்னைக்கு ஒளிபரப்பாகிற சீரியல்களில் அதிக எண்ணிக்கையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஆர்ட்டிஸ்டுகள் இருக்காங்க. அதனாலதான் இப்படியொரு கடிதம் எழுத வேண்டி வந்தது

முதல்கட்டமா கடிதம் தந்திருக்கோம். அவங்களுடைய பதில் நடவடிக்கையைப் பொறுத்து எங்களுடைய அடுத்த மூவ் இருக்கும்” என்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.