பழைய ஓய்வூதிய திட்டம் போன்றதா ’உறுதியளிப்பு ஓய்வூதியத் திட்டம்?' என்ன சொல்கிறார்கள் அரசு ஊழியர்கள்?

தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டதை அறிவித்திருக்கிறது மாநில அரசு.

அதாவது சுமார் இருபது ஆண்டுகளாக அவர்கள் கேட்டு வந்த பழைய ஓய்வூதியத் திட்டத்துக்குப் பதில் TAPS எனப்படும் (Tamilnadu Assured Pension Scheme) புதிய திட்டமான உறுதியளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை இன்று அறிமுகப்படுத்தியிருக்கிறது.

ஓய்வூதியம் உயர்வு

இந்தத் திட்டம் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு இணையானதுதானா, அரசு ஊழியர்களுக்கு உண்மையிலேயே பயன் தருவதுதானா என தமிழ்நாடு தலைமைச் செயலக ஓய்வூதியர் சங்க தலைவரான கணேசனிடம் கேட்டோம். ஓய்வு பெறுவதற்கு முன் தலைமைச் செயலக பணியாளர் சங்கத் தலைவராக இருந்தவர்.

‘’2014ம் ஆண்டு அப்போதைய ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளரா இருந்தேன். அப்பவே நாங்க அரசுக்கு வச்ச கோரிக்கை இது.

ரொம்ப வருஷமா போராடியதுல இப்ப பலன் கிடைச்சிருக்கு. பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு நிகரான பலன்களை நிச்சயம் இதுவும் தரும்.

2003 ஏப்ரல் முதல் தேதியில் இருந்துதான் பழைய ஓய்வூதியம் கிடையாதுன்னு சொன்னாங்க. இருபது வருசத்துக்கும் மேலா போராடி இன்னைக்கு இந்த அறிவிப்பு கிடைச்சிருக்கு. இதுக்கு அரசுக்கு நாங்க நன்றி தெரிவிச்சுக்கிடுறோம்’ என்றார் இவர்.

தமிழ்நாடு அரசு |TNPSC வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு

அதேநேரம் இந்த திட்டம் பழைய ஓய்வூதியத் திட்டம் தந்த பலனைத் தராது என ஒரு சாரார் கூறுகின்றனர்.

அவர்களில் சிலரிடம் பேசினோம்.

‘’பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வூதியம் முழுக்க முழுக்க அரசின் பங்களிப்பாக மட்டுமே இருந்தது. அதாவது ஊழியர்களின் சம்பளத்தில் எந்தத் தொகையும் பிடித்தம் செய்யப் பட மாட்டாது.

ஆனால் இப்போது அறிவித்திருக்கும் திட்டத்தில் பத்து சதவிகிதம் ஊழியர்களிடமிருந்து எடுக்கப் படுகிறது. அதனால்தான் பழைய ஓய்வூதியத் திட்டமே வேணும்னு நாங்க கேட்டது’ என்கின்றனர் இவர்கள்.

ஓய்வூதியதாரர்கள்

ஏப்ரல் 2003க்குப் பிறகு கொண்டு வரப்பட்ட பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் என்பது, 14 சதவிகிதம் ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் பிடிக்கப்பட்டு அதற்கு ஈடான தொகையை அரசு செலுத்தும். ஓய்வு பெறும் போது அப்படி சேரும் தொகை ஒரே கட்டமாக வழங்கப்பட்டு வந்ததாகத் தெரியவருகிறது.

ஆனால் இந்தத் திட்டத்தின் படி ஓய்வூதியம் பெறுவதில் பல ஆண்டுகளாக ஒரு குழப்பம் தான் மிஞ்சுகிறது என்கிறார்கள்.

அதாவது அரசின் பங்களிப்பு தொகை செலுத்தப்பட்ட விவரத்தை ஊழியர்களால் தெரிந்து கொள்ள இயலாத நிலையே நீடித்ததாக கூறுகின்றனர்.

எப்படியோ பல துறை அரசு ஊழியர்கள் அங்கங்கே போராடி வருகிற சூழலை இந்த திட்டத்தைக் காட்டி ஓரளவு தணிக்கலாமென நினைத்திருக்கிறது திமுக அரசு.

அரசு ஊழியர்களுக்கு நிஜமாகவே இந்த திட்டத்தின் மீது மகிழ்ச்சியா இல்லையா என்பது தேர்தல் ரிசல்ட் வரும்போதுதான்  தெரிய வரும்.!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.