சென்னை,
ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் ஆக்கி இந்தியா அமைப்பு, ஆண்களுக்கான ஆக்கி இந்தியா லீக் போட்டியை 2013-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. 2017-ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 5 சீசன் நடைபெற்றது. அதன் பிறகு பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்ட இந்த ஆக்கி தொடர் 8 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு மீண்டும் தொடங்கியது. அதில் பெங்கால் டைகர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
8 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது ஆக்கி இந்தியா லீக் (ஆண்கள்) போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று இரவு தொடங்கியது.
தொடக்க லீக் ஆட்டத்தில் அமித் ரோகிதாஸ் தலைமையிலான தமிழ்நாடு டிராகன்ஸ் அணி, சுமித் தலைமையிலான ஐதராபாத் டூபான்சுடன் பலப்பரீட்சை நடத்தியது. விறுவிறுப்பான இந்த ஆட்டம் வழக்கமான நேரம் முடிவில்3-3 என்ற கோல் கணக்கில் டிராவில்முடிந்தது. இதைத்தொடர்ந்து வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க கடைபிடிக்கப்பட்ட பெனால்டி ஷூட்-அவுட்டில் தமிழ்நாடு டிராகன்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் ஐதராபாத் டூபான்சை வீழ்த்தி போட்டியை வெற்றியுடன் தொடங்கியது.